தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்
Iran Protest : ஈரானில் இளம்பெண் ஒருவரின் மரணத்திற்குப் பின், நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தங்களது முடியை வெட்டியும், ஹிஜாப்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்திற்கான பின்னணி குறித்து பார்ப்போம்.
ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள சாகேஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் கடந்த 13-ம் தேதி, தனது பெற்றோருடன் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சிறப்புப் பிரிவு போலீஸாரின் பணி பெண்கள் ஆடை அணியும் விதத்தைக் கண்காணிப்பதே. மாஷா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் குற்றம் சாட்டி இந்த சிறப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
போலீஸ் காவலில் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 3 நாட்கள் கோமா நிலையில் இருந்த மாஷா கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், சிறு வயதில் அவரது மூளையில் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறியுள்ள போலீஸார், உடல்நலக்குறைவு காரணமாகவே மாஷா உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.
ஆனால், அப்பெண்ணின் பெற்றோரோ தங்களது மகளுக்கு எவ்வித நோயும் இல்லை எனவும், அவர் முழு ஆரோக்கியத்துடனே இருந்ததாகவும் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாஷா அமினியின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்திற்கானக் காரணம் தெரிய 3 வாரங்கள் வரை ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Russia Ukraine War: ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா
மாஷா அமினியின் மரணம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் பல்வேறு பகுதியில் உள்ள பெண்கள் தங்களது முடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் பல பெண்கள் தங்களது முடியை வெட்டிக் கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 7 வயதில் இருந்து தலைமுடியை மறைக்கவில்லையென்றால் தங்களால் பள்ளிக்குச் செல்லவோ, வேலை செய்யவோ முடியாது எனவும், இந்த பாலின சமத்துவமற்ற ஆட்சியால் தாங்கள் சோர்வடைந்து விட்டதாகவும், ஈரானிய பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆடைக் கட்டுபாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்தே, பெண்கள் துணிச்சலுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது கண்னீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேளும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த துணை ராணுவமும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரப்பர் குண்டுகள் தாக்கி 38 பேர் வரை காயமடைந்துள்ளதாக ஈரானில் செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அமினியின் இறுதிச்சடங்கில் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனை செய்ய அனுமதிக்க மறுத்த அவரது தந்தை, 2 முடிகள் தெரிந்ததற்காக தனது மகள் கொல்லப்பட்டுள்ளதாக மத குருமார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ஈரானில் ஆடைகளை மையமாக வைத்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது புதிதல்ல. பல நாட்களாக இருந்த கொந்தளிப்பு, மாஷா அமினியின் மரணத்தினால் தற்போது சர்வதேச கவனம் பெற்றுள்ளது. தாலிபான் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தானில் மட்டுமே இது போன்ற அடிப்படைவாத சட்டங்கள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூட பெண்களுக்கான பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. இந்நிலையில் இன்னும் உடையின் பெயரால் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை திரும்பப்பெற வேண்டிய நேரம் வந்துள்ளதையே இப்போராட்டம் காட்டுகிறது.
மேலும் படிக்க | கோஹினூரில் இருந்து க்ரீஸ் வரை : பிரிட்டனில் உள்ள பிற நாட்டு கலைப் பொருட்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ