என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக இந்தியாவிற்கு ஆதரவு அளியுங்கள் : அமெரிக்கா கோரிக்கை
என்.எஸ்.ஜி எனப்படும் அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளன. இந்த குழுவில் இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்தியா கடந்த மே 12-ம் தேதி விண்ணப்பித்தது. அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
என்எஸ்ஜி-ல் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் கூட அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதே அடிப்படையில் இந்தியாவுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அணுசக்தி வினியோக நாடுகள் குழுவின் ஆண்டு கூட்டம் சியோலில் இந்த மாதம் 24-ம் தேதி நடைபெறுகிறது. இதில், அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா சேர்க்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில் சியோலில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து உள்ளது. புதிய நாடுகளை அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் சேர்க்கும் திட்டம் குறித்து சியோல் கூட்டத்தில் விவாதிக்கபடாது என நேற்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறிய நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளிக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜோஷ் ஏர்நெஸ்ட் பேசுகையில்: அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் இணைய இந்தியா தயாராக உள்ளது, இவ்வாரம் இறுதியில் சியோலில் நடைபெறும் கூட்டத்தின் போது இந்தியாவின் விண்ணப்பத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்து உள்ளது. குழுவில் உறுப்பினராக கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதில் உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டவேண்டிய அவசியம் உள்ளது, இந்தியா உறுப்பினர் ஆகுவதற்கு அமெரிக்கா நிச்சயமாக வாதாடும் என்றும் ஜோஷ் கூறிஉள்ளார். அமெரிக்கா முழுமையாக இந்தியாவை ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.