இலங்கையில் 52 நாட்கள் நடந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது. அதிபர் முன்னிலையில் மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் ரணில் விக்ரமசிங்கே!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிபரின் செயலாளர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். கடந்த அக்டோபர் 26-ஆம் நாள் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். இதனையடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



எனினும், அதிபரின் இந்த தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், குறித்த மனுக்கள் ஏழு பேரை கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றம் கலைப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், கடந்த மாதம் 14-ஆம் நாள் மீண்டும் நாடாளுமன்றம் கூடியது.


அப்போது அதிபரால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால் அரசியல் கொந்தளிப்பு மேலும் தீவிரமடைந்ததுடன், ரணிலை ஒருபோதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என அதிபர் தெரிவித்தார்.


இருந்தபோதும், ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்றில் நம்பிக்கை தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தனர். இதைத்தொடர்ந்து மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். 


இந்நிலையில் இன்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.