முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்
இலங்கைக்கு செய்த மனிதாபிமான உதவிகளுக்காக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரசிங்கே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 137 வகையான மருந்து பொருட்கள் என 136 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை அனுப்பிவைக்க மத்திய அரசும் அனுமதி அளித்தது. முதற்கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், கடந்த 18-ம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 'தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்' எனும் வாசகம் அச்சிடப்பட்ட மூட்டைகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கை சென்றடைந்தன. இதனைத் தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் இலங்கை வந்துள்ளதாகவும், இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றி கூறுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் தங்களுக்கு ஆதரவளித்த இந்திய மக்களுக்கு நன்றி கூறுவதாகவும் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். அடுத்த கட்டமாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் 24, 28 மற்றும் 31ம் தேதிகளில் 3 தவணைகளாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க | இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR