வாஷிங்டன்: கன்சாஸில் இந்திய இன்ஜினியர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோதே அங்கிருந்தவர்கள் கைதட்டி அவரை வரவேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய டிரம்ப் கூறுகையில்,


அமெரிக்காவில் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சாத்தியமில்லாத கனவுகள் கூட நிறைவேறும். இன்று நான் காண்பது அமெரிக்கா துடிப்பானதாக மாறியுள்ளதை தான்.


வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். குடுயேற்ற சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் வேலையில்லாதவர்களுக்கு உதவ முடியும், கோடிக்கணக்கான டாலர்களை சேமிக்க முடியும், நம் சமூகத்தை பாதுகாப்பானதாக்க முடியும்.


கன்சாஸில் இந்திய என்ஜினியர் கொல்லப்பட்டதை கண்டிக்கிறேன். மேலும் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


சட்டம் ஒழுங்கு இல்லாமல் குழப்பமாக இருக்கும் சூழலில் அமெரிக்காவால் வெற்றி பெற முடியாது. நம் குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகள், போதைப் பொருள் விற்பனையாளர்களை கைது செய்து வருகிறோம் என்றார் டிரம்ப்.