புதுடெல்லி: இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையோர கிராமங்கள் மற்றும் நிலைகளை குறி வைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர், தாக்குதல் நடத்தினர். சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணி அளவில் இந்த அத்துமீறல் நடைபெற்றது.
ஹிராநகர் செக்டாரில் போபியா பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு இந்திய எல்லைக்காவல் படையினர் பதிலடி தாக்குதல் தொடுத்தனர்.
Also Read | புதுவையில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி.. மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா..!!!
பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரம் வசிப்பவர்கள், இரவு நேரத்தில் பதுங்கு குழிகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது.
அதேபோல், காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் இருப்பதான ரகசிய தகவல்களின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், ராணுவ வீரர்களுடன் சென்று, இரு தினங்களுக்கு முன்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் போலீசாரும், இந்திய ராணுவமும் இணைந்து மேற்கொண்ட இந்த கூட்டு நடவடிக்கையில், அங்கிருந்த பதுங்கு குழிகளில் இருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கிகளும், சீன தயாரிப்பு துப்பாக்கிகளும், 4 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த இரண்டு பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
Also Read | சமூக ஊடகங்களை முறைப்படுத்தும் சட்டத்தை கொண்டு வர அரசு திட்டம்: ராம் மாதவ்
இதனையடுத்து காஷ்மீரின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு அடுத்த நாளே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் செய்துள்ளது கவலையளிக்கிறது. ஆனால், எல்லையில் பணியில் இருக்கும் ராணுவத்தினர் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR