ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!

MS Dhoni Rinku Singh: சென்னைக்கு அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து கொல்கத்தாவிற்கு வெற்றியை தேடி தந்த ரிங்கு சிங்கிற்கு தோனி  பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 15, 2023, 11:12 PM IST
  • சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி அணியுடன் மோதுகிறது.
  • இப்போட்டி வரும் மே 20ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது.
  • இப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளேஆப் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கிடைக்கும்.
ரிங்கு சிங்கிற்கு தோனி கொடுத்த 'பரிசு'... அசந்துபோன அதிரடி நாயகன்!  title=

IPL CSK vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தனது அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி அணியுடன் வரும் மே 20ஆம் தேதி மோத உள்ளது. இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், சென்னை அணி சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டியில் நேற்று விளையாடியது. இதில், தோல்வியடைந்தாலும், ரசிகர்களின் தொடர் பேராதரவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை சென்னை அணி நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. 

போட்டிக்கு பின் நடைபெற்ற இந்த நிகழ்வில், தோனி உள்ளிட்ட அணி வீரர்கள் பார்வையாளர்களை நோக்கி கையெழுத்திடப்பட்ட டென்னிஸ் பந்துகளை அடித்தும், மைதானம் முழுவதும் சுற்றி வந்தும் தங்களது நன்றியை அவர்களுக்கு பரிசளித்தனர். மேலும், தோனி பார்வையாளர்கள் அரங்கில் இருக்கும் ரசிகர்களுடன் மைதானத்தில் இருந்து செல்பி எடுத்த நிகழ்வும் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

அதுமட்டுமின்றி அவர் பலரின் டி-சர்ட் மற்றும் ஆடைகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக, இந்திய அணி முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான சுனில் கவாஸ்கர், மைதானத்தில் தனது சட்டையில் தோனியின் கையெழுத்தை வாங்கியது பலரையும் கவர்ந்தது எனலாம். ஜாம்பவனாக கருதப்படும் சுனில் கவாஸ்கர், தோனியிடம் கையெழுத்து வாங்குவது என்பது மிகவும் அரிதான ஒன்று என ரசிகர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர். அந்த அளவிற்கு தோனி மீதான மதிப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | Dhoni: தோனி எப்படி கேப்டன் ஆனார் தெரியுமா? - ரவி சாஸ்திரி சொல்லும் ரகசியம்!

குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது என்பதால், அடுத்த போட்டியில் சென்னை அணி வெல்லும்பட்சத்தில், மீண்டும் ஒருமுறை போட்டியை அங்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இது என கூறப்படும் நிலையில், அவர் மைதானத்தில் விளையாடுவதை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை விளையாடும் அனைத்து மைதானங்களிலும் கூடுகின்றனர். இந்த தொடரே தோனிக்கானது என தோன்றும் அளவிற்கு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை அணி, கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்து வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, ரிங்கு சிங் - ராணா ஆகியோர் நிலையாக நின்று விளையாடி சிஎஸ்கேவின் கனவை கலைத்தனர். இதனால், பிளேஆப் செல்லும் சிஎஸ்கேவின் வாய்ப்பு இன்னும் ஊசலாட்டத்திலேயே உள்ளது. அவர்கள் இருவரும் அரைசதம் அடித்திருந்த நிலையில், ரிங்கு சிங் ஆட்ட நாயகனாக தேர்வானார். 

அந்த வகையில், ஆட்ட நாயகனாக தேர்வான ரிங்கு சிங்கிற்கு தோனி நேற்று சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ட்விட்டர் பதிவில், ரிங்கு சிங்குவின் டி-சர்ட்டில் தோனி கையெழுத்திட்ட  புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. மேலும், தோனியுடன் ரிங்கு சிங் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது. இது நேற்றைய போட்டியை வென்றதற்காக ரிங்கு சிங்கிற்கு தோனி அளித்த பரிசு என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். 

ரிங்கு சிங் இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார் எனலாம். 13 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 407 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 58 ரன்களை எடுத்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 143 ஆக உள்ளது. மேலும், அவரின் சராசரி 50.88 ஆகும். குறிப்பாக, குஜராத் அணியுடனான போட்டியில், ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டிய போட்டியை யாராலும் மறக்க முடியாது. 

மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் அணியில் இவனுக்கு இடமில்லைன்னா வேற யாருக்கு? ரவி சாஸ்திரி ஆருடம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News