திருமண அழைப்பிதழில் மிளிரும் தமிழ் மீதான காதல்: சபாஷ் போடவைத்த குடும்பம்!!

கிருஷ்ணகிரியில் ஒரு குடும்பம், திருமண அழைப்பிதழை திருக்குறள், விளக்கம் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயர்கள் கொண்ட புத்தகமாக அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 1, 2023, 01:50 PM IST
  • திருமண அழைப்பில் ஒரு புதுமை.
  • அழைப்பிதழில் திருக்குறளும், விளக்கமும்.
  • தமிழ் பெயர்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.
திருமண அழைப்பிதழில் மிளிரும் தமிழ் மீதான காதல்: சபாஷ் போடவைத்த குடும்பம்!! title=

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிருந்தாவன் நகர் செவன் ஹில்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்திரன். இவருக்கு வயது 61. இவர் முன்னாள் பஞ்சு ஆலை தொழிலாளி. இவரது மனைவி ரெங்கநாயகி(55) அரசுபள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு குயில்மொழி, முகிலன் என ஒரு மகள் மகன் உள்ளனர். முகிலன் அயர்லாந்து நாட்டில் பணிபுரிகிறார். அடுத்த மாதம் 10-ம் தேதி  முகிலனுக்கும், சேலம் மாவட்டம்  சின்ன திருப்பதியை சேர்ந்த நித்ய சுபாசினி என்பவருக்கும், சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

திருமண அழைப்பிதழ் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என ரவீந்திரன் யோசித்துள்ளார். அந்த வகையில் உலகப் பொதுமறை திருக்குறளை, அதன் விளக்க உறையுடனும்,  மற்றும் ஆண், பெண் குழந்தைகளின் ஒரு லட்சம் தமிழ் பெயர் கொண்ட  2 புத்தகத்துடன் திருமண அழைப்பினை இணைக்க முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் புத்தகத்தின் முதல் பக்கத்தில் மணமக்கள் பெயர், திருமணம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இருந்தது. 

அதனை தொடர்ந்து திருக்குறள் மற்றும் விளக்கவுரைகளும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தக அழைப்பிதழ் 280 பக்கங்கள் கொண்டுள்ளது. மொத்தம் 500 புத்தக திருமண அழைப்பிதழை அச்சிட்டுள்ளனர். அதே போல் மற்றொரு புத்தகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெயர் வைக்க  ஒரு லட்சம் தமிழ் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகத்தில் 256 பக்கங்கள் உள்ளன.  

அதில் ‘நமது குடும்பம் தமிழ் நெறி குடும்பமாக விளங்க நம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டவேண்டும். நம்முடைய பெயர் பிறமொழியில் அமைந்திருந்தால் அதனை தமிழ்படுத்திக்கொள்ளவும், அனைத்து இடங்களிலும் தமிழிலியே கையெழுத்திடவேண்டும், அனைத்து  கல்வி துறையிலும்  தமிழ் வாயிலாக படிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட இல்ல சடங்குகளை தமிழிலேயே நடத்த வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாக கடைபிடிக்க வேண்டும்’ என அச்சிட்டிருந்தனர். 

மேலும் படிக்க | வருமான வரித்துறை நோட்டீஸ் நடவடிக்கைத் தடை கோரிய வழக்கை திரும்பப் பெற்றார் ஓபிஎஸ் 

இதனை உறவினர்களுக்கு அந்த குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். திருமண அழைப்பிதழ் வெறும் காகிதமாக இல்லாமல், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தக அழைப்பிதழ் வழங்கும் இந்த குடும்பத்தின் முயற்சி பாராட்டுக்குரியது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு முன் உதரணமாகவும் உள்ளது.

இது குறித்து ரவீந்திரன் கூறும் போது, ‘சிறுவயதிலிருந்து தமிழ் மீதும் திருக்குறள் மீது பற்று அதிகம். இதனால் நான்  திருவள்ளூவர் இலக்கிய மன்றம் ஒன்றை வைத்திருந்தேன். இதனால்  தமிழ் மீது மேலும்  பற்று ஏற்பட்டது. தற்போது எனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்து  எனது நண்பர்கள் தமிழ்முகிலன் , நற்றேவன் ஆகியோர் ஆலோசனைபடி, திருக்குறள்  புத்தகம் மற்றும் தமிழ் பெயருடன்  இரு புத்தகங்களுடன் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்னையில் 500 புத்தகங்கள் அச்சிட்டேன். ஒரு  திருமண அழைப்பிதழ் புத்தகத்திற்கு ரூ.450 செலவானது. அதே போல்  புத்தக அழைப்பிதழ் மட்டுமின்றி, அதனை வழங்க பயன்படும் தாம்பூல பையில் ஒரு புறம் மணமக்கள் பெயரும், மறுபக்கம் திருவள்ளூவர் உருவமும் அச்சிட்டுள்ளோம். திருமணம்  தமிழ்நெறி திருமணம் முறையில் நடைபெற உள்ளது.’ என்று கூறினார். 

தமிழ்  குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்ததாக கூறிய அவர், பல ஆண்டு காலங்கள் ஆனாலும் இந்த திருமண அழைப்பிதழ் புத்தகம், வீடுகளின் அலமாரிகளில்  அலங்கரிக்கும் என தெரிவித்தார்.

இந்த தாம்பூலத்தை பெற்றுக் கொண்ட உறவினர் அருண்குமார், ‘பொதுவாக இல்லறம் சம்பந்தமான ஒரு குறளைமட்டுமே அச்சு அடித்து திருமணத்திற்கு வழங்குவார்கள். 1330 திருக்குறளும் அதன் தெளிவுரையும் மற்றும் ஒரு லட்சம் ஆண் பெண் இருபாலரின் சுத்த தமிழ் பெயர்களும் அச்சிடப்பட்டு கொடுத்தது எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இதை அடுத்த நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம்’ என மகிழ்ச்சியுடன் கூறினார்

மேலும் படிக்க | அமைச்சரை விட மருத்துமனை இயக்குனர் பெரியவரா? பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News