மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஆந்திராவில் இன்று முழு அடைப்பு!!
ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திரா மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத் தொடர்ந்து நடந்த அமளிகளால் பாராளுமன்றத் தொடர் முடங்கிப் போனது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உட்பட பல பாஜகவினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து, ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினை மசோதாவில் அறிவித்த 19 அம்சங்களை அமல்படுத்த கோரியும் மத்திய அரசை கண்டித்து சந்திரபாபு நாயுடு வரும் 20-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு காங்., இடது சாரிகட்சிகள், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றம் ஆந்திரா பிராத்யேக ஹூடா சாதானா சமிதி யும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஆந்திராவில் சாலைகள் வெறிச்சோடின. பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பையொட்டி ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முழு அடைப்பு காரணமாக,12,000 பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதியுற்றனர். ஆந்திராவுக்கு செல்லும் தமிழக பஸ்கள் எல்லைப்பகுதியிலே நிறுத்தப்பட்டன.