நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தான் வங்கிகள் இணைக்கப்படுகின்றன, அழிவிற்காக இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் தெரிவிக்கையில்., "ஆட்டோமொபைல் துறை பின்னடைவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்ட மந்த நிலைக்கு மத்திய அரசு காரணம் அல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்பே காரணம். 


அதிக பங்குகளுடன் ஆட்டோ மொபைல் துறை செயல்படவே விரும்புகிறோம். ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆராய வேண்டியுள்ளது. அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். 


மத்திய அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகின்றது. மத்திய பட்ஜெட்டில் வங்கிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கினோம். வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகள் இணைப்பால் எந்த வங்கியும் மூடப்படாது. வேலை இழப்பு ஏற்படாது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் வங்கிகள் இணைக்கப்படுகின்றன. 2 அடுக்கு நகரங்கள் மீது அரசு கவனம் செலுத்தி வருகின்றது என தெரிவித்தார்.




இதனிடையே மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு, பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர்., ‘மன்மோகன் சிங் அவ்வாறு சொன்னாரா? அவரது கருத்தை கேட்டுகொள்கிறேன். நான் தொழிலதிபர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், அரசிடம் எதிர்பார்ப்புகளை கேட்டு அறிகிறேன். அவர்களுக்கு தேவையான பதிலை தருகிறோம். இன்னும் செய்ய உள்ளோம். உலக பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் தான் உள்ளது’ என தெரிவித்தார்.