பாடாய் படுத்தும் லோன் ரெகவரி ஏஜெண்டுகள்.... வங்கிகளை எச்சரித்து வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் RBI விதிகள்!!
RBI Update: பல சந்தர்ப்பங்களில் கடன் மீட்பு முகவர்கள் அதாவது லோன் ரெகவரி ஏஜெண்டுகளின் துன்புறுத்தலுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது. இது நமது மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றது.
RBI Update: நாம் நமது வாழ்க்கையிக் பல தேவைகளுக்காக அவ்வப்போது கடன் வாங்குகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் கடனை திருப்பி கட்டிவிட வேண்டும், மாதா மாதம் தவணையை சரியாக கட்ட வேண்டும் என்றே நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால், பல சமயங்களில் அது முடியாமல் போகின்றது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவது நமக்கு பொருளாதார அழுதத்தை கொடுப்பதோடு, நமது மன நிலையையும் வெகுவாக பாதிக்கின்றது. பல சந்தர்ப்பங்களில் கடன் மீட்பு முகவர்கள் அதாவது லோன் ரெகவரி ஏஜெண்டுகளின் (Loan Recocery Agents) துன்புறுத்தலுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது. இது நமது மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றது.
கடன் மீட்பு முகவர்களால் வரும் பிரச்சனைகள் என்ன?
வங்கியில் நாம் வாங்கும் கடன் செயல்முறையில் மூன்று வெவ்வெறு தரப்பினர் உள்ளனர். கடன் வாங்கும் வாடிக்கையாளர், வங்கி மற்றும் கடன் மீட்பு முகவர்கள். வாடிக்கையாளர் கடனை ஒழுங்காக செலுத்தி விட்டால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அப்படி செலுத்தாத வாடிக்கையாளரிடமிருந்து கடன் பாக்கியை வசூலிக்க வங்கிகள் கடன் மீட்பு முகவர்களை நியமிக்கின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை திரும்ப பெற்றுக்கொடுப்பதில் அந்த முகவர்களுக்கு கமிஷன் கிடைக்கிறது. ஆகையால், எப்படியாவது அவர்களிடமிருந்து தொகையை பெற்று தங்கள் கமிஷனை பெறுவதையே அவர்கள் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். சில முகவர்கள் கடனை திரும்ப பெற வாடிக்கையாளர்களிடம் வன்முறைகளிலும் ஈடுபடுவது உண்டு. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சில சமயம் சிலர் இந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கும் செல்வதுண்டு.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள அறிவுறுத்தல்கள்:
- வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்து சட்டப்பூர்வ வழிகளில் மட்டுமே கடனை வசூலிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) நியாயமான நடைமுறைக் குறியீட்டின் கீழ், வங்கிகள் கடனை (Loan) வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் திரும்பப் பெற வேண்டும்.
- வங்கிகள் உடல் ரீதியாகவோ வாய்மொழியாகவோ வாடிகையாளர்களை அச்சுறுத்த முடியாது.
- சட்டப்பூர்வமாக தேவைப்படும் வரையில், கடனை வசூலிக்க மூன்றாம் தரப்பினருக்கு கடன் தகவலை வழங்கக்கூடாது. கடன் வாங்குபவரின் தனியுரிமையைப் பாதுகாப்பது வங்கிகளின் பொறுப்பாகும்.
- வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், முதலில் வங்கிகள் வாடிக்கையாளருக்கு ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும். நிலுவையில் உள்ள தொகையின் அளவு, கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் எடுக்கப்படக்கூடும் நடவடிக்கைகளின் முழு விவரங்களையும் இதில் தெரிவிக்க வேண்டும். இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு கடன் கணக்கு அறிக்கையும் வழங்கப்பட வேண்டும்.
- வங்கிகள் கடன் மீட்பு முகவர்களின் உதவியைப் பெறுவதாக இருந்தால், இந்த முகவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நடத்தை விதிகளின்படி மட்டுமே தங்கள் வேலையைச் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த முகவர்கள் அடையாள அட்டையின் நகல், அங்கீகாரக் கடிதம் மற்றும் வங்கி வழங்கிய நோட்டீஸ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, இந்த முகவர்கள் வாடிக்கையாளர்களை எந்த வகையிலும் அச்சுறுத்தவோ துன்புறுத்தவோ முடியாது.
- வங்கிகள் வாடிக்கையாளரின் அசையும் அல்லது அசையாச் சொத்தை ஏலம் விட்டால், நிதிச் சொத்துக்களைப் பத்திரப்படுத்துதல் மற்றும் மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் பாதுகாப்பு வட்டிச் சட்டம், 2002 (SARFAESI சட்டம்) மற்றும் பாதுகாப்பு வட்டி (அமலாக்கம்) விதிகள், 2002 ஆகியவற்றின் விதிகளின் கீழ் மட்டுமே அதைச் செய்ய வேண்டும்.
- வாடிக்கையாளர்களின் (Bank Customers) சொத்தை உடைமையாக்கும் விதிகளை வங்கிகள் கடன் ஒப்பந்தத்தில் வைத்திருக்கலாம். வாடிக்கையாளர்கள் இதை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும். ஏனெனில் கடனை திர்ப்பி செலுத்தாத நிலையில், இந்த விதி செல்லுபடியாகும் பட்சத்தில், வங்கிக்கு இந்த உரிமை கிடைக்கிறது. ஒப்பந்தத்தில், ஒப்பந்தம் அறிவிப்பு காலம், அறிவிப்பு காலத்திலிருந்து விலக்கு மற்றும் உடைமைக்கான செயல்முறை ஆகியவற்றை விவரிக்க வேண்டும்.
ரெகவரி ஏஜெண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள்:
- முக்கியமாக, வங்கிகள் முறையான விசாரணைக்குப் பிறகுதான் மீட்பு முகவர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கான வெரிஃபிகேஷன் நடக்க வேண்டும்.
- மீட்பு முகவர்கள் கண்ட நேரத்தில் வாடிக்கையாளரை அழைக்க முடியாது. முகவர்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களை அழைக்க முடியும்.
- வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மீட்பு முகவர் மற்றும் அவரது ஏஜென்சி பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் போது முகவர்கள் தங்கள் அடையாள அட்டை அதாவது, ஐடியைக் காட்ட வேண்டும். அவர்கள் இதைச் செய்யவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் அதைப் பற்றி புகார் செய்யலாம்.
- மீட்பு முகவருக்கு வங்கி (Banks) வழங்கிய அறிவிப்பு மற்றும் அங்கீகார கடிதத்தில் மீட்பு முகவர்களின் எண்கள் இருக்க வேண்டும். போன் அழைப்பில் என்ன உரையாடல் நடந்தாலும் பதிவு செய்யப்பட வேண்டும்.
- மீட்பு செயல்முறை தொடர்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து ஏதேனும் புகார் வந்தால், அதைத் தீர்க்க வங்கிகளுக்கு ஒரு தளம் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | வீட்டிலேயே இருந்து ‘இந்த’ சுய தொழில்களை செய்யலாம்! அதிக வருமானம் தரும் ஐடியாக்கள்..
மீட்பு முகவர்களின் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் துன்புறுத்தலாகக் கருதப்படும்?
- முகவர்கள் அரசின் போலியான சின்னம் அல்லது முத்திரையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை அச்சுறுத்துவது.
- அடிக்கடி தொலைபேசியில் பேசி தொல்லை கொடுப்பது, இழிவான சொற்களை பயனபடுத்துவது, ஆபாசமாக பேசுவது, ஆபாசமான செய்திகளை அனுப்புவது.
- ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைப் பயன்படுத்தி அச்சுறுத்துவது, வாடிக்கையாளரைப் பின்தொடர்வது.
- வாடிக்கையாளரின் அலுவலகத்தை, முதலாளியை தொடர்புகொள்வது.
- வேறு கடன் வாங்கியோ அல்லது வீட்டை விற்றோ இந்த கடனை, நிலுவைத் தொகையை அடைக்கும் படி வற்புறுத்துவது.
- வாடிக்கையாளரின் குடும்பத்தினரையும் சக ஊழியர்களையும் தொந்தரவு செய்வது.
- சமூக ஊடக தளங்களை தவறாக பயன்படுத்துவது.
- சட்ட நடவடிக்கை எடுப்பதாகவோ அல்லது கைது செய்வதாகவோ மிரட்டுவது.
- வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு சென்று மற்றவர்கள் முன்னிலையில் அச்சுறுத்தி அவமானப்படுத்துவது.
வாடிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டால் என்ன செய்யலாம்?
- வாடிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம். போலீஸ் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் மாஜிஸ்திரேட்டிடம் செல்லலாம்.
- காவல்துறையின் உதவி கிடைக்காவிட்டால், வாடிக்கையாளர்கள் சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.
- வாடிக்கையாளர்கள் தங்கள் தனியுரிமை மீறப்படுவதாக வங்கியில் புகார் செய்யலாம் அல்லது அவதூறு வழக்கும் தொடரலாம்.
- வாடிக்கையாளர்கள் புகாருடன் ரிசர்வ் வங்கிக்கும் செல்லலாம். துன்புறுத்தலில் ஈடுபடும் கடன் மீட்பு முகவர்களை ஆர்பிஐ -யும் (RBI) தடை செய்யலாம்.
மேலும் படிக்க | HDFC வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. FD வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ