வேலூர் மக்களவை தேர்தலுக்கான ADMK பொறுப்பாளர்கள் நியமனம்!
வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக!
வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக!
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி, நேற்று (ஜூலை 18) நிறைவடைந்தது. இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிற நிலையில், வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக. ஏற்கனவே, திமுக 70-க்கும் மேற்பட்டோரை தேர்தல் பொறுப்பாளராக அறிவித்துள்ளது. தற்போது அதிமுக, திமுகவை விட இரண்டு மடங்கு கூடுதலாக மொத்தம் 209 பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் பணிக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் வரும் 22-ஆம் தேதி முதல் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் தங்கி தேர்தல் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.