5 States Assembly Election Dates Announced Today: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று (அக்போடபர் 09, திங்கள்கிழமை) அறிவித்தது. இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகள் 27 நாட்கள் நடைபெறும். நவம்பர் 7 ஆம் தேதி மிசோரமில் முதலில் வாக்குப்பதிவு நடைபெறும். இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் ஒரே நேரத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும் உள்ளது. தெலங்கானாவில் கேசிஆர் கட்சியான பிஆர்எஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது.


முதல் முறை 60.2 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்


இந்த மாநிலங்களில் மொத்தம் 16.14 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி) ராஜீவ் குமார் திங்கள்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இவர்களில் 8.2 கோடி ஆண்களும், 7.8 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். இம்முறை 60.2 லட்சம் புதிய வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் என்றார்.



மேலும் படிக்க - 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு... டிச. 3இல் வாக்கு எண்ணிக்கை!


இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்


-- ஐந்து மாநிலங்களில் உள்ள 679 சட்டசபை தொகுதிகளுக்கு 1.77 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 60.2 லட்சம் புதிய வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர். 


-- இந்த தேர்தலில் முதல் முறையாக வயது 18 முதல் 19 வயது வரை நிரம்பிய 60.2 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 18 வயது நிறைவடைந்த 15.39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.


-- மாதிரிச் சாவடிகள் 17734, மாற்றுத்திறனாளி பணியாளர்களால் 621 வாக்குச் சாவடிகள் நிர்வகிக்கப்படும். 8192 வாக்குச் சாவடிகளில் பெண்கள் பணியாற்றுவார்கள்.


-- 1.01 லட்சம் வாக்குச் சாவடிகளில் கேமரா பொறுத்தப்படும். பழங்குடியினருக்கென சிறப்புச் சாவடிகள் அமைக்கப்படும். 2 கிலோமீட்டருக்குள் வாக்குச் சாவடிகள் இருக்கும்.


-- முதன்முறையாக, சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் உள்ள சந்த்மேட்டா மற்றும் ஜக்தல்பூர் பஸ்தாரில் அமைந்துள்ள துளசி டோங்ரி மலை பகுதியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கிராம மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாக்குச் சாவடிக்கு 8 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.


-- ராஜஸ்தானில் உள்ள மஜோலி பார்மரில் 5 கிமீ தொலைவில் சாவடி இருந்தது. 2023 தேர்தலுக்காக 49 வாக்காளர்களுக்கான புதிய சாவடி கட்டப்பட்டுள்ளது.


-- cVIGIL செயலி மூலம் தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். மேலும் இந்த செயலி மூலம் மக்கள் புகார் தெரிவிக்கலாம்.


 



ஐந்து மாநில தேர்தல் எப்போது நடைபெறும்? தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?


மாநிலம் தேர்தல் நாள் மொத்த தொகுதிகள்
மிசோரம் 7 நவம்பர் 40 இடங்கள்
மத்தியப் பிரதேசம் 17 நவம்பர் 230 இடங்கள்
சத்தீஸ்கர் 7 மற்றும் 17 நவம்பர் 90 இடங்கள்
ராஜஸ்தான் 23 நவம்பர் 200 இடங்கள்
தெலுங்கானா 30 நவம்பர் 119 இடங்கள்

 



ஐந்து மாநிலங்களிலும் கடைசியாக எப்பொழுது தேர்தல் நடந்தது? 


2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் டிசம்பர் 7 ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 28 ஆம் தேதியும், தெலுங்கானாவில் டிசம்பர் 7 ஆம் தேதியும், மிசோரமில் நவம்பர் 18 ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேசமயம் சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவு டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது.


மேலும் படிக்க - ராகுல் காந்தி 'தீயவர், மதத்திற்கும் ராமருக்கு எதிரானவர், புதிய சகாப்தத்தின் ராவணன்' -பாஜக


மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய பல அரசியல் நாடகங்கள்


மத்தியப் பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல அரசியல் நாடகங்கள் நடந்தன. தேர்தல் முடிவுகளில் பாஜகவை விட காங்கிரஸ் 5 இடங்கள் அதிகம் பெற்றது. காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களிலும், எஸ்பி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. கூட்டணி அமைத்ததன் மூலம் காங்கிரஸ் 116 என்ற பெரும்பான்மையை பெற்று கமல்நாத் முதல்வராக பதவியேற்றார்.


காங்கிரஸ் ஆட்சி 15 மாதங்கள் மட்டுமே நீடித்தது. பாஜகவின் அரசியல் சூழ்ச்சி காரணமாக் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதில் 6 அமைச்சர்களும் அடங்கும். அமைச்சர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதால், ராஜினாமா காரணமாக காங்கிரஸ் தலைமையிலான கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது.


இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே கமல்நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியில் கிளர்ச்சி எம்எல்ஏக்களை சேர்த்து பாஜக தனது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 127 ஆக உயர்த்தி ஆட்சி அமைத்தது. நான்காவது முறையாக மாநிலத்தின் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார்.


ராஜஸ்தானில் 25 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறுகிறது


ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற இடங்கள் உள்ளன. 2018ல் இங்கு 199 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. ஆல்வார் ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லக்ஷ்மண் சிங் மாரடைப்பால் காலமானார். இதனால் ஒரு தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.


199 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களைப் பெற்றது. இங்கு காங்கிரசை ஆதரித்த ஆர்எல்டி ஒரு இடத்தைப் பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் 100 இடங்கள் பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.


பின்னர், 2019 இல் நடைபெற்ற ராம்கர் தொகுதி தேர்தலிலும், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதால், காங்கிரசுக்கு மொத்த 101 இடங்கள் ஆக உயர்ந்தது. காங்கிரஸ் தலைமையில் அசோக் கெலாட் மாநிலத்தின் முதல்வராக உள்ளார்.


மேலும் படிக்க - Caste Census | மண்டல் 2.0: மாற்றம் வருமா? பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு! அஞ்சும் பாஜக!


சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி


சத்தீஸ்கரில் 2018 சட்டமன்றத் தேர்தலில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 90 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. பாஜகவுக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 68 இடங்களும் கிடைத்தன. பின்னர் சில எம்எல்ஏக்கள் கட்சி மாறினர். தற்போது சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு 71 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 13 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 பேரும், அஜித் ஜோகியின் கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஒரு இருக்கை காலியாக உள்ளது. மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார்.


2018 தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரே ஒரு இடம்


தெலுங்கானாவில் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. தற்போதைய முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் கட்சியான டிஆர்எஸ் (2022ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்பதில் இருந்து பாரத் ராஷ்டிர சமிதி என கட்சியின் பெயர் மாற்றப்பட்டது) அதிகபட்சமாக 88 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரசுக்கு 19 இடங்கள் கிடைத்தன.


தற்போதைய நிலவரப்படி, 119 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு தற்போது 101 எம்எல்ஏக்கள் உள்ளனர். அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம்-க்கு 7 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 5 பேரும், பாஜகவுக்கு 3 பேரும், ஏஐஎஃப்பிக்கு ஒருவர், நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர்.


10 ஆண்டுகளுக்குப் பிறகு மிசோரமில் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி


மிசோரத்தில் 2018 சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) மீண்டும் ஆட்சி அமைத்ததி. மொத்தம் 40 இடங்களுக்கு நடந்த தேர்தலில் எம்என்எப் 26 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும் பெற்றன. இது தவிர, ஜோரம் மக்கள் இயக்கத்துக்கு 8 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைத்தன. ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி ஜோரம்தங்காவை முதல்வராக்கியது. தற்போதைய நிலவரப்படி,. மிசோ தேசிய முன்னணிக்கு தற்போது 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 5, ஜோரம் மக்கள் இயக்கத்துக்கு ஒன்று, பாஜகவுக்கு ஒன்று மற்றும் 5 சுயேச்சைகள் உள்ளனர்.


மேலும் படிக்க - பீகார் சாதிவாரி மக்கள் தொகை... வெளியான முடிவுகள் - ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்கள் எத்தனை சதவீதம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ