INDIA கூட்டணியை சாய்த்ததா பாஜக...? Exit Poll சொல்வது என்ன?
5 States Election Exit Poll Overall: இந்த 5 மாநிலங்களின் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒட்டுமொத்தமாக எதை எதிரொலிக்கிறது என்பதை இதில் காணலாம்.
5 States Exit Poll Overall: மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் டிச. 3ஆம் தேதி இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள்தான் ஏறத்தாழ அடுத்து வரும் மக்களவை தேர்தலை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது. அதாவது, இறுதிப்போட்டி மக்களவை தேர்தல் என்றால் இந்த அரையிறுதிப்போட்டி இந்த 5 மாநில தேர்தல் எனலாம்.
அந்தளவிற்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மீது எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இன்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, இந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இணைந்து உருவாக்கிய I.N.D.I.A கூட்டணிக்கு இந்த 5 மாநில தேர்தல் என்பது மிக முக்கியமானது என்பதால் இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இந்த கூட்டணி மீதும் அழுத்தத்தை எழுப்பியுள்ளது. எனவே, தற்போது வெளியாகி உள்ள தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒட்டுமொத்தமாக எதை எதிரொலிக்கிறது என்பதை இதில் காணலாம்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் - காங்கிரஸின் நிலை
காங்கிரஸ் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கிறது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமையும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அது மெய்யாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பல கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக ஆட்சியைக் கைப்பற்றவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன. அண்டை மாநிலம் பஞ்சாபை பறிகொடுத்தது போன்று ராஜஸ்தானும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. Rajasthan Exit Poll முடிவுகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். சத்தீஸ்கர் மாநிலத்தை காங்கிரஸ் தக்கவைக்கும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் பூபேஷ் பாகலின் செயல்பாடு ஆட்சிக்கு எதிர்ப்பு மனநிலையை துடைந்தெறிந்துள்ளது எனலாம். Chhattisgarh Exit Poll முடிவுகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மய்யமாக நிற்கும் மத்திய பிரதேசம்
இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் காங்கிரஸ் - பாஜக இடையே கடுமையான போட்டிகள் இருக்கும் என தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த முறையே ஆட்சியை பிடித்தும் பின்னர் காங்கிரஸ் மத்திய பிரதேசத்தை நழுவவிட்டது. இந்த முறை ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதால் காங்கிரஸ் கைப்பற்ற சற்று வாய்ப்பு இருக்கிறது என்றாலும், மத்தியில் பாஜகவின் செல்வாக்கு இந்த மாநிலத்தில் அதிகம் இருக்கும் காரணத்தால் உறுதியாக கூற முடியாது என்பதையும் இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. Madhya Pradesh Exit Poll முடிவுகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
தெலங்கானாவில் காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கிடைக்கப்போகும் ஒரே ஆறுதல் பரிசு தெலங்கானா என அரசியல் வல்லுநர்கள் இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரிவிக்கின்றனர். 2014இல் மாநிலம் உருவானதில் இருந்து தற்போது வரை பாரதீய ராஷ்டிரிய சமிதி (BRS) ஆட்சியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் அதிகம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் மாநில உருவாக்கத்தில் சந்திரசேகர ராவ்வின் பங்களிப்பால், அவரின் கை ஓங்கத் தொடங்கியது. தற்போது ஆட்சிக்கு எதிரான மனநிலை வலுபெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதேதான் இந்த முடிவுகளும் தெரிவிக்கின்றன. பாஜக மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆகியவை ஒற்றை இலக்க தொகுதிகளை பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றன. Telangana Exit Poll முடிவுகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மிஸோரம் சட்டப்பேரவை எப்போதும் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்தான் அதிகமிருக்கும். மேலும் இந்த முறையும் ஆளுங்கட்சி மிசோரம் தேசிய முன்னணி (MNF), சோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆகிய கட்சிகளிடையேதான் கடும் போட்டி நிலவும் என EXIT POLL முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் பாஜக - காங்கிரஸ் சொற்ப தொகுதிகளை பெறலாம்.
இதன்மூலம், பாஜக மத்திய பிரதேசத்தில் கடுமையாக போட்டியிட்டு ஆட்சியை தக்கவைக்க வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்த உள்ளது. சத்தீஸ்கரில் பெரிய வாய்ப்பு இல்லை. இதன்மூலம், பாஜக இந்த தேர்தல் ரேஸில் வெற்றி பெற்றது என்றுதான் கூற வேண்டும். மக்களவை தேர்தல் நோக்கில் பாஜகவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும், I.N.D.I.A கூட்டணிக்கும் சற்று பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும். சத்தீஸ்கர் அவர்களின் வலுவான இடம், அது தக்கவைத்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் ராஜஸ்தான் கைவிட்டுவிட்டால் அது நாடாளுமன்ற தேர்தல் நோக்கில் பின்னடைவுதான். மத்திய பிரதேசமும் கிடைக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் எனலாம்.
இதெல்லாம் மக்களவை தேர்தலில் பிரதிபலிக்குமா என நீங்கள் கேட்டாலும் மாநிலங்களின் ஒன்றிணைவே I.N.D.I.A கூட்டணியின் முக்கிய கண்ணியாக பார்க்கப்படும் வேளையில், காங்கிரஸ் அதன் உட்கட்சி அரசியலை விடாமல் தொடர்ந்து இறுகப்பிடித்து வைத்துக்கொண்டால் ராஜஸ்தானின் நிலைமைதான்(?) பல மாநிலங்களிலும் வரும். ஒருவேளை, ராஜஸ்தானை காங்கிரஸ் இழந்துவிட்டால் அங்கிருந்து I.N.D.I.A கூட்டணி பல அதிரடி முன்னெடுப்புகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மேலும் படிக்க | மிசோரம் எக்ஸிட் போல் 2023: பெரும்பான்மை யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ