“பிரதமர் மோடி என்றால் பநோத்தி” -ராகுல் காந்தி கடும் தாக்கு.. பாஜகவினர் பதிலடி!
Rahul Gandhi Panauti Remark: நமது பசங்கள் (இந்திய வீரர்கள்) உலக கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பநோத்தியால் அவர்கள் தோற்றனர். இதை டிவிக்காரர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் பொதுமக்களுக்கு தெரியும்` என மோடியை மேற்கோள்காட்டி காட்டி ராகுல்காந்தி தாக்கு.
Rahul Gandhi Attack Narendra Modi: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடியும் மைதானத்திற்கு வந்திருந்தார். இப்போது இதை தேர்தல் உத்திக்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. இன்று (நவம்பர் 21, செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைய யார் காரணம்? என்பதைக் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். "நல்ல முறையில் விளையாடி வந்த நமது பசங்க (இந்திய கிரிக்கெட் வீரர்கள்) உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பநோத்தி (ராசியில்லாதவர்) வந்தாதால் அவர்கள் தோற்றனர்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பிரதமரை இப்படி பேசலாமா? என்று பாஜகவினர் கொந்தளித்துள்ளனர்.
பநோத்தியால் உலக கோப்பையில் இந்தியா தோற்றது -ராகுல் காந்தி
ஜலோர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நேரடியாக பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு தாக்கி பேசினார். அப்பொழுது பொதுக்கூட்டத்தில் இருந்த சிலர் பநோத்தி (Panauti), பநோத்தி (Panauti) என்று முழக்கம் இட்டனர். மேலும் பநோத்தி (Panauti) குறித்து பேசும்படி சத்தம் போட்டனர். இதனையடுத்து ராகுல் கூறுகையில், நமது பசங்கள் உலக கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பநோத்தியால் அவர்கள் தோற்றனர். இதை டிவிக்காரர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் பொதுமக்களுக்கு தெரியும்" எனக் கூறினார்.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜகவினர் கோரிக்கை
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சியினர் அவரைத் தாக்கி, அப்படி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "பிரதமர் மோடியை குறித்து ராகுல் காந்தி பயன்படுத்தும் வார்த்தைகள் அநாகரீகமானது. மோடியிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இது நாடு முழுவதும் ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றுவோம்" எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்திரா காந்தியின் பிறந்தநாள் ஒரு பநோத்தி -பாஜக
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை இந்திரா காந்தியின் பிறந்தநாளுடன் (நவம்பர் 19) இணைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு காரணம் இந்திராஜியின் பிறந்தநாள். அதனால்தான் நமது அணி தோற்றது" எனக்கூறி இந்திரா காந்தியின் பிறந்தநாளை பநோத்தி (ராசியில்லாதவர்) என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் 2023
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்துக் கட்சிகளின் முன்னணி தலைவர்களும் தேர்தல் பிரச்சார பேரணிகளை நடத்தி ஒருவரை ஒருவர் குறிவைத்து தாக்கி வருகின்றனர். சமீபத்தில், மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், ராகுல் காந்தியை, "முட்டாள்களின் தலைவன்" என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, "பிரதமர் மோடியை பநோத்தி (ராசியில்லாதவர்) என்று அழைத்தார்.
மேலும் படிக்க - "நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம்": பிரதமர் மோடி
பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள்
உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்த பிறகு, பநோத்தி (Panauti) என்ற வார்த்தை திடீரென ட்விட்டரில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. பிரதமர் மோடி மைதானத்திற்கு வந்ததால், எதிர்க்கட்சிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தி அவரை (பிரதமர் மோடி) கிண்டல் செய்த நிலையில், ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்களும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தனர். உலகக் கோப்பை இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி மைதானத்திற்கு வந்ததால் இந்திய அணி தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி
குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அரைசதம் விளாசினர். அதேநேரம், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து தனது அணியை உலக சாம்பியனாக்கினார்.
மேலும் படிக்க - தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்; காங்கிரசுக்கு திமுக ஆதரவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ