தர்மம் ஜெயிக்கும்.. அதர்மம் தோற்கும்: வெற்றி எனக்கு தான் பாஜக வேட்பாளர் பிரக்யா
மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் முன்னிலை வகித்து வருகிறார்.
போபால்: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், நாடு முழுவதும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் வாக்கு எண்ணிக்கை குறித்து பேசினார். அவர் கூறியது போபால் தொகுதியில் நான் தான் வெற்றி பெறுவேன். தர்மம் தான் எப்பொழுதும் வெற்றி பெரும். அதர்மம் தோற்கும். போபால் மக்களுக்கு நன்றி கூறுகிறேன். என்னை வெற்றி பெற வைக்கும் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் எனக் கூறினார்.
மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாஜக மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான பிரக்யா தாகூர் போட்டியிட்டார். கடந்த வாரம் கோட்சே குறித்து சர்ச்சை கருத்த தெரிவித்த பிரக்யா தேசிய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.