தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளன. இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், தாக்குதல்களும், எதிர் தாக்குதல்களும், விமர்சனங்களும், விடாமல் துரத்தும் வீண் பேச்சுகளும் வழக்கமாக காணப்படுபவைதான். எனினும், சில சமயம் இவை எல்லை மீறும் வேளையில், மக்கள் சில தலைவர்களின் உண்மையான முகங்களைக் காண வாய்ப்பும் கிடைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இந்த தேர்தல்களிலும் இப்படிப்பட்ட வசவுப் பேச்சுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லாமல்தான் உள்ளது. களத்தில் நடக்கும் பிரச்சாரன் ஒருபுறம் இருக்க, சமூக வலைதளத்திலும் இந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. 


அவ்வகையான ஒரு ட்விட்டர் போரில், தன்னைப் பற்றி கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு (Kushboo). 


சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதவரம் தொகுதி வேட்பாளர் ரமேஷ் கொண்டல் சுமாவியின் பேட்டி பற்றி பேசப்பட்டது. இது குறித்து தனது கருத்தை தெரிவிக்க, ட்விட்டரில் அந்த ட்வீட்டுக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “மக்கள் நீதி மய்யம் ஒரு நிலையான கட்சி அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எங்கே? அவர்கள் ஏன் இப்போது போட்டியிடவில்லை. வெற்றிபெறாத வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளுக்கு இன்றுவரை சென்று வந்து கொண்டிருக்கிறார்களா?


ரமேஷ் தோற்றால் மீண்டும் மாதவரம் தொகுதிக்குச் செல்வாரா? 2019 தேர்தலில் மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த சினேகன் என்பவர் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். அவர் தோற்ற பிறகு மீண்டும் தொகுதிக்குச் சென்றாரா?. மக்கள் நீதி மையம் போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலின்போது மட்டும் ஒன்று கூடுவார்கள் அதன்பின் காணாமல் போவார்கள்.


கமல்ஹாசன் (Kamal Haasan), குஷ்பு போன்ற திரையுலகைச் சேர்ந்த பிரபல வேட்பாளர்கள் தவிர்க்க முடியாத அவர்களின் தோல்விக்குப் பிறகு அவரவர் தொகுதிக்குச் செல்லவே மாட்டார்கள். இது மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்” என்று கூறியிருந்தார்.



தான் அளித்த பதிலில் கார்த்தி சிதம்பரம், கமல்ஹாசன், குஷ்பு ஆகியோரையும் டேக் செய்திருந்தார்.  


ALSO READ: அரவக்குறிச்சியில் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் எடப்பாடி பழனிச்சாமி


கார்த்தி சிதம்பரத்தின் இந்த ட்வீட்டுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர் அதிரடியான பதிலை அளித்துள்ளார். தனது ட்விட்டர் கணக்கில் பதிலளித்த குஷ்பு, “நண்பரே, நானும் கமல்ஹாசனும் எங்கள் தந்தையின் பெயரை வைத்துக்கொண்டு நடமாடவில்லை. அதை வைத்து நாங்கள் சாதிக்கவில்லை. வாழ்க்கையில் இந்த நிலைக்கு வரவில்லை.


எங்களால் சொந்தமாகக் கடினமாக உழைக்க முடியும். நாங்கள் இரண்டு மடங்கு உழைத்து எங்களை வெற்றி பெறச் செய்யும் மக்களுக்காக அதிகம் உழைப்போம்.


உங்கள் பாதுகாப்பின்மை சிந்தனையை உடைப்பதற்கு மன்னிக்கவும். உங்களைச் சுற்றியிருக்கும் நபர்கள், ஒரு குடும்பப் பெயரை வைத்து செல்வாக்கைக் காட்டுபவர்கள் உண்மைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ளட்டும்.


நானும் கமல்ஹாசனும் சொந்தமாக உழைத்து முன்னேறியவர்கள். எங்களது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் திறமையும், நேர்மையும் மட்டுமே எங்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. எனவே பொதுவில் உங்கள் பாதுகாப்பின்மை மனப்பான்மையைக் காட்டி உங்கள் தந்தைக்கு இன்னும் அவமானத்தைத் தேடித் தராதீர்கள்.


நான் திமுகவில் (DMK) இருந்து காங்கிரசில் இருந்து தானாக வெளியேறவில்லை. யாரோ ஒருவரது மகனும், மேலும் அனைவரும் எனது இருப்பினால் பயப்பட ஆரம்பித்தார்கள். அதனால் நான் வெளியே தள்ளப்பட்டேன். என்னைப் பார்த்து நீங்கள் பயந்தால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது.


தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மகன்களை விடத் தானாக முன்னேறிய ஒரு நபருக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தினால் நீங்கள் இப்படி உணர்ந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.



ALSO READ: தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிக்கப்போவது எந்த கட்சியின் விளக்கு?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR