சபரிமலை கோவியிலில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் ஏதும் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளா ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி படு தோல்வி கண்டது.  கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.


கம்யூனிஸ்டுகளின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தீவிரமாக அமல்படுத்தியது.


இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் வெளிப்பாடுதான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கேரள சட்டசபை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், சபரிமலை பிரச்சினை குறித்தும் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்., "கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.


சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது.


உச்ச நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டை அவமதித்த வழக்கை சந்திக்க நேரிடும். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்வியை சந்தித்ததை சிலர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது வேண்டுமானால் சிரிக்கலாம். அந்த சிரிப்பு தற்காலிகமானதே. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மீண்டு எழும்." என தெரிவித்துள்ளார்.