அடுத்த 24 மணிநேரம் முக்கியம். விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ராகுல் செய்தி
உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடின உழைப்பு வீணாகாது என தொண்டர்களுக்கு செய்தி அனுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒரிசா உட்பட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 23) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
மக்களவை தேர்தல் நடந்து முடிந்தவுடன் அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. அதில் பெரும்பாலும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே ஊடங்களின் கருத்து கணிப்பு ஆகா இருந்தது. அதுவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்புக்கள் வெளியானது. அதேவேளையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 117 இடங்களும், மற்றவர்கள் 117 இடங்களைப் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமூகவலைதளங்களில் சில வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
ஒரு பக்கம் கருத்து கணிப்பு, மற்றொரு பக்கம் வாக்குபதிவு இயந்திரம் மாற்றம் மற்றும் முறைகேடு என்று செய்திகள் வந்த வந்த வண்ணம் உள்ளதால், எதிர்கட்சியினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் கருத்து கணிப்புக்களை நம்ப வேண்டாம் என்று தங்கள் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகமும் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுக்கு ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
"அடுத்த 24 மணிநேரம் முக்கியம். விழிப்புடன் இருங்கள். பயப்படாதீர்கள். நீங்கள் சத்தியத்திற்காகப் போராடுகிறீர்கள். இந்த போலியாக வெளிவரும் கருத்து கணிப்புக்களை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடின உழைப்பு வீணாகாது" ஜெய் ஹிந்த்!!
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.