புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தேசிய மாசு கட்டுப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு கொடூரமான போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

 

1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று இரவு போபாலில் உள்ள யூனியன் கார்பைட் ரசாயன ஆலையில் இருந்து மீதைல் ஐசோசைனேட் (Methyl Isocyanate) மற்றும் வேறு சில விஷ வாயுக்கள் கசிந்ததால் உலகமே சோகத்தில் ஆழும் விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.

 

இந்த கசிவு தொடர்பாக பல்வேறு வாதங்களும், விவாதங்களும் முன் வைக்கப்பட்டாலும், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் விஷ வாயுவை சுவாசித்தனர்.  இதன் தாக்கத்தில், தொடர்ந்த சில நாட்களில் குறைந்தது 4,000 பேர் கொல்லப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 4000 என்றாலும் பக்க விளைவுகள் பயங்கரமாக இருந்தன.

 

அடுத்தடுத்த ஆண்டுகளில் விஷவாயுக் கசிவின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தப்பிப்பிழைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோய் (cancer) மற்றும் பிற கொடிய நோய்களுக்கு ஆளாகினர். போபால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகள் குறைப்பாடுகளுடன் பிறக்கும் கொடுமையும் பல ஆண்டுகள் தொடர்ந்தது.

இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி என்றும் இந்தியாவின் மாறாவடுவாக தங்கிவிட்ட துயர தினமான டிசம்பர் 2 தேசிய மாசு கட்டுப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. போபால் வாயுக் கசிவு, தொழிற்சாலை மாசுப் பேரிடர்களில் மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

 


 

தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிப்பதன் நோக்கங்கள்:

தொழிற்சாலைப் பேரிடர்களை மேலாண்மை செய்து கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது

தொழிற்சாலை முறைமைகள் அல்லது மனித அலட்சியத்தால் மாசு உருவாவதைத் தடுத்தல்

மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் ஏற்படுத்துவது...

 

மனிதர்கள் வெளியேற்றும் பல்வேறு வகையான கழிவுகள் மூலம் இயற்கை வளங்கள் சேதப்படுகின்றன. நீர், காற்று, நிலம் அல்லது காடுகள் வேகமாகப் பாதிக்கப்படுகின்றன. ஆகவே இந்த விதிகளையும் சட்டங்களையும் தகுந்த முறையில் அமுல்படுத்தி சுற்றுச்சூழலைப் (environment) பாதுகாத்து மாசைக் கட்டுப்படுத்துதல் மிக முக்கியமானது ஆகும்.

 

நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு) சட்டம் (Water (Pollution Prevention and Control) Act), 1974-இன் கீழ் 1974-ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) அமைக்கப்பட்டது. மேலும், காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் (Air (Pollution Prevention and Control) Act) 1981 இன் கீழ் செயல்பட மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்ப மாற்ற அமைச்சகத்திற்கு  தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குகின்றது.

 

CPCB -யின் செயல்பாடுகள்

நீர் மாசைத் தடுத்தும் கட்டுப்படுத்தியும் தணித்தும் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் கிணறுகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது.

நாட்டில் காற்று மாசைத் தடுத்தும், கட்டுப்படுத்தியும், மட்டுப்படுத்தியும் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.

 


 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR