ஆயுர்வேதம்... 2024ம் ஆண்டில் ட்ரெண்டிங்கான சில மூலிகை வைத்தியங்கள்
ஆயுர்வேதம் எனப்படும் மூலிகைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இயற்கை சிகிச்சை முறைகள், பல நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஆயுர்வேதம் எனப்படும் மூலிகைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இயற்கை சிகிச்சை முறைகள், பல நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆயுர்வேதத்தில், மூலிகைகள், உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பயன்படுத்தி உடலில் உள்ள ஆற்றல்கள் அல்லது தோஷங்களை (வாதம், பித்தம் மற்றும் கபம்) சமநிலைப்படுத்தவும் மற்றும் முழு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தீர்வுகள் பெறப்படுகின்றன.
ஆயுர்வேதம் நோயின் அறிகுறிகளைக் காட்டிலும் நோய்க்கான மூல காரணத்தை சிகிச்சையளிப்பது, தடுப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஆயுர்வேத சிகிச்சைகள் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுவதாக அறியப்படுகிறது. நீங்கள் நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய ஆயுர்வேத மூலிகை வைத்தியங்களை (Natural Remedies) இங்கே காணலாம்.
2024 ஆண்டின் மிகவும் பிரபலமான 10 ஆயுர்வேத மூலிகை சிகிச்சைகள்
காலையில் வெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை தண்ணீர்
வெதுவெதுப்பான நீரில் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உங்கள் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த கை வைத்தியங்கள் உங்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரக நீர்
சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஊறவைத்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத தேநீர் கலவை செரிமானத்திற்கு உதவுகிறது, வீக்கத்தை குறைக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது. சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றின் கலவையானது பித்த மற்றும் வாத தோஷங்களை சமன் செய்கிறது. அதோடு, செரிமான நெருப்பை (அக்னி) வலுவாக வைத்திருக்கும்.
தூங்கும் முன் மஞ்சள் பால் குடிப்பது
மஞ்சள் பாலில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு கலந்த சூடான பானம் உடலின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்தவும், தூக்கமின்மையை போக்கவும் சிறந்த மூலிகை வைத்தியமாக இது இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் செரிமானத்தை ஆதரிக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
மன அழுத்தத்தை குறைக்கும் அஸ்வகந்தா
அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜெனிக் மூலிகையாகும். இது மன அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது. இது அட்ரீனல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. அஸ்வகந்தா நீர் அல்லது அஸ்வகந்தா பொடியை ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்வது, மனத் தெளிவை அதிகரிக்கும் மற்றும் பதட்டத்தைக் குறைக்கும்.
குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் திரிபலா
திரிபலா, என்னும் மூன்று ஆயுர்வேத மூலிகை (நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய்), செரிமானத்திற்கு உதவுகிறது, பெருங்குடலில் சேரும் நச்சுக்களை நீக்குகிறது. குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. திரிபலாவை தினமும் உட்கொள்வது குடல் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்க உதவும்... சில பழக்கங்கள்
நாஸ்யா சிகிச்சை
நாஸ்யா என்றால் மூக்கில் எண்ணெய் விடும் சிகிச்சை. சில துளிகள் வெதுவெதுப்பான எள் அல்லது மூலிகை எண்ணெயை நாசி துவாரத்தில் விட்டால், நாசிப் பாதைகள் உயவூட்டப்பட்டு, சைனஸ் பிரச்சனைகள் நீங்கும். அலர்ஜியைக் குறைக்கும். இந்த நடைமுறை சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
மூலிகை எண்ணெய் மசாஜ்
வெதுவெதுப்பான எள் அல்லது தேங்காய் எண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் நரம்பு மண்டலத்தை தளர்த்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, தூக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் குளிர்காலத்தில் வாத தோஷத்தை சமநிலைப்படுத்துகிறது.
ஆயில் புல்லிங் பயிற்சி
தினமும் காலையில் 10-15 நிமிடங்கள் எள் அல்லது தேங்காய் எண்ணெயை உங்கள் வாயில் ஊற்றிக் கொண்டு கொப்பளித்தால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றலாம். இது உங்கள் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த பாரம்பரிய நடைமுறை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் குறைக்கிறது. ஆரோக்கியமான பற்கள் மற்றும் புத்துணர்ச்சியான சுவாசத்தை கொடுக்கிறது.
நாக்கை சுத்தம் செய்தல்
தினமும் காலையில் உங்கள் நாக்கை சுத்தம் செய்ய உலோகம் அல்லது செப்பு ஸ்கிராப்பரைப் பயன்படுத்துவதன் மூலம், இரவில் சேரும் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுகள் அகற்றப்படுகின்றன. இந்த எளிய தீர்வு வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, வாய் துர்நாற்றத்தை குறைக்கிறது மற்றும் சுவை உணர்வை அதிகரிக்கிறது.
தோஷத்திற்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுத்தல்
உங்கள் உடலில் அதிகமாக உள்ள தோஷத்தின் (வாதம், பித்தம் அல்லது கபம்) அடிப்படையில் உங்கள் உணவை சமநிலைப்படுத்துங்கள். இந்த நடைமுறை செரிமானம், ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மலச்சிக்கல் பாடாய்படுகிறதா? வயிற்றை சுத்தம் செய்ய எளிமையான டிப்ஸ்....!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ