சபரிமலை நோக்கி இன்று காலை பயணம் மேற்கொண்ட இரு இளம்பெண்களை திரும்ப அனுப்ப கோரி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.


இதனையடுத்து சபரிமலை செல்வதற்கு ஆண்களும், பெண்களுமாய் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இதன் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் மறுநாள் தரிசனம் செய்தனர்.



இந்நிலையில் இன்று காலை சபரிமலை நோக்கி இரண்டு இளம்பெண்கள் பயணம் மேற்கொண்டனர். அப்பச்சிமேடு பகுதியில் இவர்களை தடுத்து நிறுத்திய ஐயப்ப பக்தர்கள், அவர்கள் கோவிலுக்குள் செல்ல கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக அங்கு திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.


இதனையடுத்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள நிலவரத்தை அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர். இதனையடுத்து தடுத்து நிறுத்தப்பட்ட 2 பெண்களையும் திருப்பு அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். எனவே, 2 பெண்களும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். 


முன்னதாக நேற்று தமிழகத்தை சேர்ந்த 11 பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டது குறிப்பிடத்துக்கது!