7 மாநில இடைத்தேர்தல் வெற்றி.. மோடி சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி - ராகுல்
Rahul Gandhi News : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் சம்மட்டி அடி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
Rahul Gandhi News Tamil : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் தலா 4 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி, திமுக தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பாஜக இரண்டு தொகுதிகளிலும், பீகாரில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார். உத்தரக்காண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், பத்ரிநாத், மங்களூர் என இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இதேபோல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தொகுதிகளுக்கு நடைபெற்ற நிலையில் இரண்டு தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
மேலும் படிக்க | இடைத்தேர்தலிலும் சறுக்கிய பாஜக! 12 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் இருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்திருப்பதை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ள அவர், பா.ஜ.க.வினர் பின்னியிருந்த 'பயம் மற்றும் குழப்பம்' என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், வேலை செய்பவர்கள் என ஒவ்வொரு வகுப்பினரும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறார்கள் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் வாழ்வின் மேம்பாட்டிற்காகவும், அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காகவும் இந்தியா கூட்டணியுடன் முழுமையாக நிற்கின்றனர், வாழ்க இந்தியா, வாழ்க அரசியலமைப்பு என்றும் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் திமுக கைப்பற்றியது. வெற்றி குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொய் வேஷக்காரர்களின் பரப்புரையை மக்கள் நிராகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பல அவதூறுகளை பரப்பியவர்களை மக்கள் விரட்டியடித்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை, இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் எண்ண ஓட்டத்தை எப்போதும் பிரதிபலிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ