கேரளாவின் இடுக்கி அணை நிரம்புகிறது.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
கேரளாவின் இடுக்கி அணை நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக எல்லையில் அமைத்துள்ள கேரளாவை சேர்ந்த இடுக்கி மாவட்டத்தில் 1973 ஆம் ஆண்டு இடுக்கி அணை கட்டப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரமாக கட்டப்பட்ட இந்த அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி. ஆகும்.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வருடம் வழக்கத்தை விட 50 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறு, குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இடுக்கி அணையின் மொத்தம் கொள்ளளவு 2403 அடி ஆகும். தற்போது 2395 அடிக்கு மேலாக தண்ணீர் நிரம்பி உள்ளது. இன்னும் சில நாட்களில் 9 அடி நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் கரையோரத்தில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இடுக்கி அணையின் கொள்ளளவு 2400 அடியை தொட்டதும் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அணை திறந்து விடப்பட்டால், எர்ணாகுளம், கோட்டயம் என கரையோரத்தில் உள்ள சுமார் 500-க்கு மேற்ப்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கரையோர மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு முகாம் ஏற்பாடு செய்து கொடுத்துருக்கிறது கேரளா அரசு. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கபட்டு உள்ளன.
இடுக்கி அணை கடைசியாக 1992 ஆம் ஆண்டு திறந்து விடப்பட்டது. தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.