துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி மகன் கோர்டில் சரணடைந்தார்
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி., ராகேஷ் பாண்டேவின் மகன் ஆஷிஷ் பாண்டே கோர்டில் சரணடைந்தார்.
டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே துப்பாக்கியை காட்டி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி., மகனின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த அக்டோபர் 14-ம் தேதி டெல்லியின் நட்சத்திர ஓட்டல் வெளியே ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலானது. சில விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பிங்க் நிர கால்சட்டை அணிந்த ஆஷிஷ் பாண்டேவின் வலது கையில் துப்பாக்கியுடன் ஒரு இளம் பெண் மற்றும் ஆணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வாக்குவாதத்தில் ஈடுபடுக்கொண்டிருந்த அவரை ஓட்டல் பணியாட்கள் உள்ளிட்டோர் சமாதானப்படுத்துகின்றனர். பின்னர் அவர் காரில் வந்து அமருகிறார். மேலும் தகாத வார்த்ததைகளில் மிகவும் மோசமாக பேசுகிறார். மிரட்டலில் ஈடுபட்டவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி., ராகேஷ் பாண்டேவின் மகன் ஆஷிஷ் பாண்டே ஆவார்.
இவர் மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று(அக்டோபர் 18) டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஷிஷ் பாண்டே சரண்டைந்தார். இதனையடுத்து ஒரு நாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.