Allu Arjun vs Hyderabad Police Latest News Updates: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா - 2 திரைப்படம் கடந்த டிச. 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஆனால், அதற்கு முன்னரே டிச.4ஆம் தேதி இரவு புஷ்பா - 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் ஹைதராபாத் நகரில் திரையிடப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், ஹைதராபாத் நகரில் உள்ள சந்தியா திரையரங்கிலும் (Sandhya Theatre) டிச.4ஆம் தேதி இரவு, புஷ்பா 2 திரைப்படத்தின் (Pushpa 2) சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. அங்கு படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுனும் வருகை தந்தை சிறப்பு காட்சியை திரையரங்கில் பார்த்தார். அப்போது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் அவரது 8 வயது மகன் சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என கூறப்படுகிறது.


விஸ்வரூபம் எடுக்கும் அல்லு அர்ஜூன் விவகாரம்


இந்த விவகாரத்தில் அனுமதியின்றி அல்லு அர்ஜுன் (Allu Arjun) திரையரங்கிற்கு வருகை தந்ததாக கூறி அவரை ஹைதராபாத் போலீசார் டிச.13ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் அவருக்கு அன்றே ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் அவர் ஒருநாள் இரவு முழுவும் சிறையில் இருந்து டிச.14ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து பலரும் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறு என தெலங்கானா அரசின் மீது குற்றஞ்சாட்டி வந்தனர். அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது எனலாம்.


மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்! என்ன தெரியுமா?


முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியது என்ன?


அந்த வகையில், நேற்று முன்தினம் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி (Telangana Chief Minister Revanth Reddy) சட்டப்பேரவையில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். சிறப்பு காட்சிக்கு அவர் வருகை தர போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார்.


மேலும், கூட்டநெரிசல் ஏற்பட்டு அங்கு அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதாக போலீசார் அவரிடம் கூறிய பின்னரும் திரைப்படம் முழுமையாக நிறைவடைந்த பிறகே தான் சொல்வேன் என்று அல்லு அர்ஜுன் போலீசாரிடம் கூறியதாகவும் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார். அதன்பின் திரையரங்கில் இருந்து புறப்படாவிட்டால் கைது செய்ய நேரிடும் என போலீசார் கூறிய பின்னரே அவர் திரையரங்கில் இருந்து புறப்பட்டதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.


அதுமட்டுமின்றி, கடந்த டிச.2ஆம் தேதி அன்று திரையரங்க நிர்வாகம், சிறப்பு காட்சிகள் குறித்து போலீசாரிடம் அனுமதி கோரினர். அதாவது, முன்னணி நடிகர்களும், சிறப்பு விருந்தினர்களும் டிச.4ஆம் தேதி அன்று திரையரங்கிற்கு வர உள்ளதாகவும், அதற்காக போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் அனுமதி கோரினர். ஆனால், திரையரங்கில் ஒரு நுழைவு வாயிலும், ஒரு வெளியேறும் வழியுமே இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது என கூறி போலீசார் அனுமதி அளிக்க மறுத்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.


மேலும் படிக்க | 2 வாரத்தில் இத்தனை கோடி வசூலா? புஷ்பா 2 படத்தின் புதிய சாதனை!


புஷ்பா - 2 ஹிட்...


மேலும் சட்டப்பேரவையில் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி,"எனக்கு கிடைத்த தகவலின்படி, திரையரங்கு வெளியே கூட்டநெரிசல் ஏற்பட்டது குறித்தும், அதில் ஒரு நபர் இறந்தது குறித்தும் அல்லு அர்ஜுனுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, ​​​​இப்போது படம் ஹிட் ஆகும் என்று கூறியுள்ளார்" என பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். 


அல்லு அர்ஜூன் vs ஹைதராபாத் போலீசார்


ஆனால், அல்லு அர்ஜுன் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த நிலையில், தன்னிடம் போலீசார் கூட்டநெரிசல் குறித்து எதுவும் கூறவில்லை என்றும் திரையரங்க நிர்வாகிகளே தன்னிடம் வந்து தகவல் சொல்லியதாகவும் கூறினார். மேலும், தனக்கு அந்த பெண் உயிரிழந்தது மறுநாள் காலையில்தான் தெரியவந்தது என்றும் தனது பெயருக்கு சிலர் களங்கம் கற்பிக்கின்றனர் என அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தனர்.


இந்நிலையில், ஹைதராபாத் போலீசார் (Hyderabad Police) சம்பவம் நடந்த அன்று சந்தியா திரையரங்கில் பதிவான சிசிடிவி வீடியோவை ஹைதராபாத் போலீசார் நேற்று வெளியிட்டனர். அதில், அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்கில் இருந்து வெளியேறுவதை பார்க்க முடிந்தது. தன்னிடம் போலீசார் யாரும் கூட்டநெரிசல் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என அல்லு அர்ஜுன் கூறியதற்கு நேர் எதிராக இருந்தது. மேலும் நான் வரும்போது போலீசார்தான் எனக்கு வழி ஏற்படுத்தியதாகவும், அவர்களின் வழிகாட்டுதலின்படியே தான் திரையரங்குக்குள் சென்றதாக அல்லு அர்ஜுன் கூறியிருந்தார்.



மேலும் படிக்க | Allu Arjun : புஷ்பா 2 சம்பவம் துருதிஷ்வசமானது, சட்டத்தை மதிக்கிறேன் - அல்லு அர்ஜூன்


போலீசார் சார்பில் தகவல் தெரிவித்தோம்


அல்லு அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதை, ஹைதராபாத் காவல் உதவி ஆணையர் ரமேஷ் நேற்றிலும் முற்றிலுமாக மறுத்தார். அதுகுறித்து அவர் கூறுகையில்,"புஷ்பா -2 படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் சந்தியா திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அல்லு அர்ஜுன் மேனேஜர் சந்தோஷிடம்தான் கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குறித்து முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகவும், ஒரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரிடம் கூறினோம். ஆனால், சந்தோஷ் உள்ளிட்டோர் எங்களை அல்லு அர்ஜுனை சந்திக்க அனுமதிக்கவில்லை" என்றார். இதனால், அல்லு அர்ஜுன் மற்றும் ஹைதராபாத் போலீசாருக்கும் இடையிலான விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.


எதிர்க்கட்சிகள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு


அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பிஆர்எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செய்ய மறுத்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே காங்கிரஸ் அரசு அவரது பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக எதிர்க்கட்சிகள் சராமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். 


அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்


ஹைதராபாத் நகரில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு ஒரு கும்பல், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜுனின் இல்லத்தை முற்றுகையிட்டது (Allu Arjun House Attack). அவர்கள் தக்காளியை வீசியது மட்டுமின்றி அங்கிருந்த பூந்தொட்டிகளையும் அடித்து நொறுக்கினர். 


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்லு அர்ஜுனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், கூட்டநெரிசலில் இறந்த பெண்ணுக்கு நீதி கோரியும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். இந்த தாக்குதலின்போது, அல்லு அர்ஜுன் வீட்டில் இல்லை. இதுகுறித்து இன்னும் அல்லு அர்ஜுன் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.


மேலும் படிக்க | புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ