BRICS 2017: அமைதி, வளர்ச்சிக்கு ஒற்றுமை அவசியம்; மோடி
சீனாவின் ஜியொமென் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு இன்று துவங்கி உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 9 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜுமா, பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை துவங்கிய மாநாட்டின் துவக்க விழாவில் மோடி பேசியது:-
அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஒற்றுமை அவசியம். பிரிக்ஸ் நாடுகளில் உள்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வளர்ச்சி வங்கி கடன்களை வழங்கி வருகிறது.
வறுமையை ஒழிப்பதற்கு, சுகாதாரத்தை உறுதி செய்வதற்கு, சுத்தம், திறன், உணவு. பாதுகாப்பு, ஆண்-பெண் சமத்துவம், மின்சாரம், கல்வி ஆகியவற்றை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து, நிறைவேற்றி வருகிறோம்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் வலிமை மற்றும் பன்முக தன்மை நிச்சயம் வளர்ச்சியை ஏற்படுத்தும். சோலார் மின் திட்டத்தை வலிமைப்படுத்த ஐஎஸ்ஏ.,வுடன் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.
பிரிக்ஸ் நட்புறவு கண்டுபிடிப்புக்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது. திறன் மேம்பாடு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, தொடர்புகள் ஆகியவற்றில் பிரிக்ஸ் மற்றம் ஆப்பிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இந்திய வரவேற்கிறது.
இவ்வாறு மோடி பேசி உள்ளார்.