CBI இயக்குனர், சிறப்பு இயக்குனரிடையே மோதல் வெடித்ததையடுத்து, புதிய CBI  இயக்குனராக நாகேஸ்வர் ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CBI  இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு இருவரையும் அழைத்துப் பேசினார். குஜராத்தை சேர்ந்த மருந்து நிறுவனம், வங்கி மோசடி தொடர்பான புகாரில் சிக்கியதையடுத்து ராகேஷ் அஸ்தானா மீதும் புகார் எழுந்தது.


அவரை CBI  இணை இயக்குனராக நியமிக்க ஆரம்பத்தில் இருந்தே ஆலோக் வர்மா எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்த மோதல் குரேஷி வழக்கில் உச்சக்கட்டத்தை எட்டியது. ராகேஷ் அஸ்தனாவுக்கு இறைச்சி ஏற்றுமதியாளர் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சப் பணத்தை கைமாற்றியதாக அண்மையில் மனோஜ் பிரசாத் என்ற தரகரை அண்மையில் CBI  அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து ராகேஷ்குமார் மற்றும் CBI  டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேவேந்திரகுமாரும் கைது செய்யப்பட்டார்.



லஞ்ச வழக்கில் தம்மை கைது செய்ய தடைகோரி ராகேஷ் அஸ்தானா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ராகேஷை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு வழக்கு அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதலுடன் CBI  இணை இயக்குனரான ஐபிஎஸ் அதிகாரி நாகேஸ்வர் ராவை CBI  இயக்குனரின் பொறுப்புகளை கவனிக்குமாறு மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.