மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு சிஆர்பிஎப் படை வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கொல்கத்தா கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
சிபிஐ அதிகாரிகளை அனுப்பி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மாநில அதிகாரங்களை பறிக்கும் செயலில் ஈடுபட்டு உள்ள மத்திய அரசை கண்டித்து நேற்று முதல் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
இதுக்குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அரசு மீதும் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் மீதும் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் மம்தா பானர்ஜி இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளதால், மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க முடிவு செய்தது மோடி அரசு.
இதனையடுத்து மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு சிஆர்பிஎப் படை வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சார்பில் சுப்ரீம் கோர்டில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.