ஆந்திரப்பிரதேச மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் சந்திரபாபு நாயுடு; என்.டி.ராமராவ் வகுத்துத் தந்த பாதையில் இருந்து சந்திரபாபு நாயுடு முற்றிலும் விலகி விட்டார் என மோடி குற்றசாட்டு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‛ஆந்திராவின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு அளித்த தொகையை எந்த வழியில் செலவழித்தீர்கள் என கணக்கு கேட்டதால், அதற்கு பதில் கூற முடியாத முதல்வர் சந்திரபாபு நாயுடு, பயந்து நடுங்குகிறார். அதனால் தான் தற்போது, மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார்’’ என, குண்டூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்து வரும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‛‛ஆந்திராவின் வளர்ச்சிக்கு, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு எதையும் செய்யவில்லை. மத்திய அரசு அளித்த நிதியை தன் சொந்த தேவைக்காக பயன்படுத்தியுள்ளார். 


ஆந்திர மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார். இதற்கு முன், அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதெல்லாம், இதற்கு முந்தைய மத்திய அரசிடம் எந்த கணக்கும் காட்ட தேவை இருந்தது இல்லை. ஆனால் தற்போது, மத்திய அரசு வழங்கிய நிதியை எவ்வாறெல்லாம் செலவு செய்தீர்கள், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் கூற மறுக்கிறார்.


 மக்கள் பணத்தை தன் சொந்த தேவைக்காக பயன்படுத்திய நாயுடு, தற்போது, மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தன் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவே கட்சி நடத்துகிறார். சொத்து சேர்ப்பதில் மட்டுமே குறியாக உள்ளார். மக்கள் வரிப் பணத்தை செலவு செய்து, எனக்கு எதிராக போராட்டம் நடத்த டில்லி வர திட்டமிட்டுள்ளார். 



அதற்கு முன், இந்த மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் என்ற கணக்கை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வாருங்கள் என்று சொல்கிறேன். டி.டி.பி., கட்சியினருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் கோ பேக் மாேடி எனக் கூறி, என்னை மீண்டும் டில்லியில் சென்று ஆட்சி செய்யக் கூறுகின்றனர்.


மக்கள் ஆசீர்வாதத்தால் நான் மீண்டும் பிரதமர் ஆவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆந்திராவின் வளர்ச்சியில் சிறிதும் அக்கறை செலுத்தாத நாயுடுவை, வரும் தேர்தலில் மக்கள் புறக்கணிப்பது உறுதி’’ என அவர் பேசினார்.