அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

INX Media நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைப்பெற்றதாக எழுந்த புகார் அடிப்படையில் CBI மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் CBI அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்படுவதற்கு முன்னதாக முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.


சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் முன் ஜாமீன் மனு செல்லாது என CBI தரப்பில் துஷார் மேத்தா வாதாடினார். மேலும், "சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமானது, கைது செய்தால் தான் உண்மை வெளிவரும். முன் ஜாமீன் எனும் பாதுகாப்பு இருந்தால் ப.சிதம்பரத்தை விசாரிக்க இயலாது. வழக்கின் விசாரணை எவ்வளவுதான் நடந்தாலும் உண்மைகள் அவரிடம் இருந்து வெளிவராது. இதற்கு அவரின் அந்தஸ்தும் ஒரு காரணம், இன்னொன்று அவருக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியும். காவலில் வைத்தால் மட்டும்தான் முடிவு வரும் என தெரிவித்தார்.


மேலும் சிதம்பரத்திற்கு சொந்தமாக வெளிநாட்டில் 17 வங்கிக்கணக்குகள் 10 அசையா சொத்துக்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. அரசியல் காழ்ப்புணர்ச்சி என சிதம்பரம் கூறினாலும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்தோம் எனவும் குறிப்பிட்டனர்.


இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.