சுப்ரீம் கோர்ட் பற்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சர்ச்சை கருத்து தெரிவித்த 4 நீதிபதிகளையும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராமீண்டும் இன்று சந்தித்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 12ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர். 


சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. 


இந்த நிலையில்  நீதிபதிகள் அவர்களுக்குள்ளேயே பேசி பிரச்சனையை தீர்த்து கொண்டதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா கூறி உள்ளார்.


இதனை தொடர்ந்து 4 நீதிபதிகளையும் நேற்று தலைமை நீதிபதி சந்தித்து பேசி உள்ளார் என கூறப்பட்டது.  ஆனால் உடல் நல குறைவால் செலமேஸ்வர் நேற்று பணிக்கு வரவில்லை.


இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


இருப்பினும் பேச்சுவார்த்தையில் தீர்வு பிறக்குமா என்ற கேள்வியே எழுந்துள்ளது. ஏனெனில் போர்க்கொடி தூக்கிய நீதிபதிகளின் முக்கிய குற்றச்சாட்டே, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுகிறார் என்பது தான்.


ஆனால் தற்போது தலைமை நீதிபதி அறிவித்துள்ள முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இந்த 4 நீதிபதிகளுக்கும் இடமளிக்கப்படவில்லை. அதில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்விகார், சந்ராசுத், அசோக் பூஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்த அமர்வு தான் ஆதார் வழக்கு, ஒரினச் சேர்க்கை எதிரான சீராய்வு மனு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககோரும் வழக்குகளை விசாரிக்க உள்ளது. இதுமட்டுமின்றி நீதிமன்ற பிரச்னையில் முக்கிய சர்ச்சையாக இருப்பது, நீதிபதி லோயா மரண வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா விசாரிப்பதாகும்.


இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீதிபதி லோயா மரண வழக்கை மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ராவே விசாரித்தார். இதன்மூலம் 4 நீதிபதிகளின் கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு என்பது கேள்விக்குரியாக உள்ளது