தசரா கொண்டாட்டம்: கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழா - சிறுவன் பலி
ஆந்திராவில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஒருவரை ஒருவர் கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழாவில், காயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்கம். இக்கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெறும். கிருஷ்ண தேவ ராயர் காலம் முதல் இவ்விழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இவ்விழாவில், விஜய தசமியன்று நள்ளிரவு சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு முன்பாக அப்பகுதி மக்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டை, தீப்பந்தம் போன்றவற்றால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட சாமி தரிசனம் செய்வது ஐதீகம்.
இந்த ஆண்டு தசரா நிறைவு நாளான நேற்றும்(அக்டோபர் 5) வழக்கம் போல் திருவிழா நடத்தப்பட்டது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவரகட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பேர் அங்கு வந்திருந்தனர். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தடிகளை பயன்படுத்தி ஒருவரை மற்றவர் தாக்குவது வழக்கம்.