காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியிடம் கலந்துரையாடும் டிரம்ப்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் மற்றும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் G7 உச்சி மாநாட்டின் போது கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் மற்றும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் G7 உச்சி மாநாட்டின் போது கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவ்வங்கினார். இந்த பயணத்தின் மூலம் நட்பு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நேற்று பிரான்ஸ் சென்ற மோடி, அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரதமர் பிலிப்பி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரான்சில் உள்ள இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பிரான்ஸில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்களில் பலியான இந்தியர்களுக்காக கட்டப்பட்ட நினைவிடத்தையும் மோடி திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் மோடி, அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானை சந்தித்து இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.
தொடர்ந்து நாளை இரவு பஹ்ரைன் செல்லும் மோடி, அந்நாட்டு இளவரசர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா, மன்னர் ஷேக் ஷமான் பின் இசா அல் கலிபா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசுகிறார். பின்னர் 25-ஆம் தேதி மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பியாரிட்ஸ் நகரில் நடக்கும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் மற்றும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., "பிராந்திய பதட்டங்களைக் குறைப்பதற்கும் காஷ்மீரில் மனித உரிமைகள் மீதான மரியாதையை நிலைநிறுத்துவதற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியிடமிருந்து கேட்க விரும்புவார்" என்று தெரிவித்துள்ளார்.