குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் 12 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு குற்றவாளிக்கு 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் அருகே உள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டியில் வசித்து வந்தவர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 66 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது ஆமதாபாத்தில் உள்ள சிறப்பு செசன்சு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.


இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 24 பேரை குற்றவாளிகள் எனவும், 36 பேரை விடுவித்தும் நீதிபதி பி.பி.தேசாய் தீர்ப்பளித்தார். 6 பேர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 24 பேருக்குமான தண்டனை விவரம் பலமுறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்து இருந்தது.


அதன்படி குல்பர்க் சொசைட்டி வழக்கில் கொலை குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.