இந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் கடும் மழையால் சுமார் 1074 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 443 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களில், 166 பேர் வெள்ளத்தினால் உயிரிழந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த வருடம் இந்தியா முழுவதும் வெள்ளம், மழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுவரை 1074 பேர் உயிரிழந்துள்ளனர். 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தென்மேற்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளா இல்லாமல் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களும் கடும் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. கேரளாவில்தான் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 218, மேற்கு வங்கத்தில் 198, கர்நாடகாவில் 166, அஸ்ஸாமில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 


கேரளாவில் மட்டும் 54 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14.52 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் 11.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 2.45 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக இருந்தது. ஆனால், இந்த வருடம் 1074 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் பேரிடர் நிகழ்ந்த பிறகு, அந்த மாநிலங்களுக்கு உதவித்தொகை அறிவிக்காமல், அந்த வருடத்தின் பட்ஜெட் கூட்டத்திலேயே பேரிடருக்கான தனி உதவித்தொகை அறிவிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.