மணிப்பூர் வன்முறை முடிவுக்கு வரவில்லை என்றால் பதக்கத்தை திருப்பி தருவோம் 11 வீரர்கள் கடிதம்
Manipur Violence: மணிப்பூரில் தொடரும் வன்முறை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்பாலில் உள்ள முதல்வர் இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்.
Amit Shah In Manipur: மே 3 முதல் மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது. இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு உட்பட மணிப்பூரைச் சேர்ந்த 11 விளையாட்டு வீரர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். எங்கள் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் நிலைமை சீராகவில்லை என்றால் தங்களின் விருதுகள் மற்றும் பதக்கங்களை திருப்பி தருவோம் என்று கூறி அனுப்பிய கடிதத்தில் மீராபாய் சானு, பத்ம விருது பெற்ற பளுதூக்கும் வீராங்கனை குஞ்சராணி தேவி, இந்திய பெண்கள் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெம் பெம் தேவி மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை எல் சரிதா தேவி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தமும் இல்லை:
பாதுகாப்புப் படைகளின் (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌஹான் கூறுகையில், மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது காலம் ஆகும் என்றார். மாநிலத்தில் வன்முறை என்பது இரு சமூகம் இடையேயான மோதலின் விளைவாகும். அதற்கும் தீவிரவாதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை. மாநில அரசுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்றார்.
மணிப்பூர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:
உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு மே 29 அன்று சென்றடைந்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை அங்கு தங்குவார். நேற்று நள்ளிரவு அவர் முதல்வர் என் பிரேன் சிங், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் என் பிரேன் சிங், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் தபன் டேகா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க - பற்றி எரியும் மணிப்பூர்.... மெய்ட்டி - குகி - நாகா சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்:
வன்முறையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், குடும்ப உறுப்பினருக்கு வேலையும் வழங்கப்படும் என அமித் ஷா அறிவித்தார். மாநிலத்தில் ரேஷன் மற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை துரித்தப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்
போலியான செய்தி பரப்பினால் தேசத்துரோக வழக்கு:
முன்னதாக, மாநிலத்தில் வன்முறை தொடர்பாக போலியான செய்திகளை பரப்புவோர் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்ய மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த காங்கிரஸ் பிரதிநிதிகள்:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான கட்சி தலைவர்கள் குழு இன்று ஜனாதிபதியை சந்தித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மணிப்பூர் வன்முறைக்கு பாஜக-வின் பிரித்தாளும் அரசியலே -காங்கிரஸ்
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம், "மணிப்பூர் 22 ஆண்டுகளுக்கு முன்பே பற்றி எரிந்து கொண்டிருந்தது. அப்போது அடல்ஜி பிரதமராக இருந்தார். இன்று மீண்டும் மணிப்பூர் பற்றி எரிகிறது, இப்போது பிரதமர் நரேந்திர மோடி. இதற்குக் காரணம் பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியலே. மணிப்பூர் பற்றி எரிகிறது, ஆனால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கர்நாடக தேர்தலில் மும்முரமாக இருந்தனர்.
மேலும் படிக்க - மணிப்பூர் வன்முறை... ரயில் சேவைகள் ரத்து... விமானம் மூலம் மீட்பு பணிகள்!
மணிப்பூர் கலவரத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்:
அமித்ஷா வருகைக்கு ஒரு நாள் முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையும் மணிப்பூரின் சில பகுதிகளில் வன்முறை அரங்கேறியது. தலைநகர் இம்பாலை ஒட்டியுள்ள செராவ் மற்றும் சுக்னு பகுதிகளில் வன்முறை மோதல்கள் நடந்தன. இதில், ஒரு போலீஸ்காரர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். மாநிலத்தில் வன்முறை காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
2,000 கிராம மக்கள் வெளியேற்றம்:
மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, மே 28 அன்று ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் இணைந்து ஒரு பெரிய மீட்புப் பணியை ஆரம்பித்தது. இதில் குகி பழங்குடியினர் மற்றும் மெய்தே சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உதவினர். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள், காவல்துறை, அரசு நிர்வாகம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் சேர்ந்து, செரோவில் இருந்து சுமார் 2,000 மெய்தே கிராம மக்களை வெளியேற்றி, பங்கல்தாபி நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 328 கிராம மக்கள் சுக்னுவில் இருந்து சாஜிக் தம்பாக்கிற்கு பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டனர்.
மே 31 வரை இணையதள தடை, 40 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்:
மணிப்பூரில் உள்ள குகி பழங்குடியின மக்கள் மெய்தே சமூகத்திற்கு எஸ்டி (ட்டியல் பழங்குடியினர்) அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து மே 3 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது தற்போது வரை தொடர்கிறது. மே 31ம் தேதி வரை இணையதளம் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - மணிப்பூரில் 23,000க்கும் மேற்பட்டவர்களை மீட்ட ராணுவம்.. கண்காணிப்பு தீவிரம்!
மெய்தே சமூகத்திற்கு இடஒதுக்கீடு கூடாது -நாகா, குகி சமூகம்
சமீபத்தில், மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்தே சமூகத்தை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் (ST) சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தளது. மணிப்பூரின் நாகா மற்றும் குகி பழங்குடியினர் மெய்தே சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கின்றனர். நாகாக்கள் மாநிலத்தின் பரப்பளவில் 90% பகுதிகளில் வாழ்கிறார்கள். அதேபோல குகி பழங்குடியினர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 34% ஆவார்கள். மணிப்பூரின் 3.8 மில்லியன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் மெய்தே சமூகத்தினர். மணிப்பூரின் 10% பரப்பளவைக் கொண்ட இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தே சமூகத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். அங்கு அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில், மெய்தேயின் மக்கள் தொகை 62 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைந்துள்ளது. மெய்தே சமூகம் தங்கள் கலாச்சார அடையாளத்திற்காக இடஒதுக்கீடு கோரி வருகிறது.
மணிபூர் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் மெய்தே சமூகம்:
ஆனால் நாகா மற்றும் குகி பழங்குடியினர் பட்டியல் பழங்குடிகள் பிரிவில் மெய்தேயிக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும் என்று பயப்படுகிறார்கள். மேலும் ஏற்கனவே மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகளில் மெய்தே சமூகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அரசியல் ரீதியாக, மெய்தே சமூகம் ஏற்கனவே மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், நாங்கள் பாதிக்கப்படும் என நாகா மற்றும் குகி பழங்குடியினர் சமூகம் கூறிவருகிறது.
மணிப்பூர் வன்முறைகளுக்கு காரணம் என்ன?
மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கு மெய்தே இட ஒதுக்கீடு காரணமாக ஒருபக்கம் இருந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுராசந்த்பூர் வனப்பகுதியில் வசிக்கும் நாகா மற்றும் குக்கி பழங்குடியினரை ஊடுருவல்காரர்கள் எனக்கூறி, அவர்களை வெளியேற்ற முதல்வர் பிரேன் சிங் அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - Manipur Violence: பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ