இந்தியா-சீனா மோதல்: தமிழர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்; சீன தரப்பில் 40 பேர் பலி
கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் அதிகாரி உட்பட 20 இந்திய வீரர்கள் (Indian soldiers) கொல்லப்பட்டனர்.
லாடக்: கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் திங்கள்கிழமை மாலை ஒரு காலாட்படை பட்டாலியன் கட்டளை அதிகாரி உட்பட 20 இந்திய வீரர்கள் (Indian soldiers) கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் கடந்த 40 நாட்களாக இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது ஆரம்ப அறிக்கையில், ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. அன்று மாலையில், இராணுவத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், உயரமான நிலப்பரப்பில் பூஜ்ஜிய வெப்பநிலையில் (Zero Temperatures)நடந்த மோதலில் 17 இந்திய வீரர்கள் கடுமையாக காயமடைந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர் எனக் கூறப்பட்டு உள்ளது.
இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் கற்கள், கம்பி மற்றும் ஆணி பதித்த ஆயுதங்களால் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கிக் கொண்டனர். இருப்பினும், இரு படைகளும் கை சண்டை போடுவது அல்லது கற்கள் மற்றும் தண்டுகளைப் பயன்படுத்தி அந்த பகுதியில் ஒருவருக்கொருவர் தாக்குவது இதுவே முதல் முறை அல்ல.
இதையும் படியுங்கள்: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி..!
இந்தியா மற்றும் சீனாவின் உயர்மட்ட இராணுவப் பிரதிநிதிகள் எல்.ஏ.சி (Line of Actual Control) விவகாரம் குறித்து தொடர்ச்சியான பேச்சுவாரத்தை நடத்தியபோதும், எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோசமாக மோதிக்கொண்டனர்.
இந்திய சீன எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இருநாடுகளும் அமைதி காக்க வேண்டும். இருதரப்பு மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதையும் படியுங்கள்: என் மகன் நாட்டிற்காக உயிர்விட்டதை எண்ணி பெருமையடைகிறேன்: சந்தோஷின் தாய்!
இந்திய சீன எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிபின் ராவத், முப்படை தளபதிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ஆகியோருடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு நாட்டின் பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். அவரிடம் எல்லையில் நிலவி வரும் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தார்.
ஒருபக்கம் பாகிஸ்தான், மறுபுறம் சீனா எல்லையில் தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வருகின்றன. தெற்கு ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சியை ஒருநாடுகளும் விரும்பவில்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது.