இந்தியன் ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்க, ரயில் பயணிகள், மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., ரயில்வேயின் வருமானத்தை அதிகரிப்பதற்கான 100 நாள் திட்டம் பிரதமர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


தற்போது, ரயிலில் பயணம் செய்யும் மக்களிடம் 53% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஞ்சிய 47% மானியமாக அளிக்கப்படுகிறது. தற்போது, எரிவாயு மானியத்தை பொது மக்கள் தாங்களாக விட்டு கொடுத்தது போல், ரயில் பயணத்திற்கான மானியத்தையும் விட்டு கொடுக்கும்படி பயணிகளிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளோம். மானியத்தை விட்டு கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த முடிவை பயணிகள் தான் எடுப்பார்கள். விட்டு கொடுப்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.


பயணிகள் மானியத்தை விட்டு கொடுப்பதற்கான திட்டம் மற்றும் வழிமுறைகள் குறித்தும், IRCTC இணையதளத்தில் வெளியிடப்படும். விட்டு கொடுப்பதா அல்லது வேண்டாமா என்ற முடிவை தேர்வு செய்வதற்கான வசதியும், இணையதளத்தில் ஏற்படுத்தி தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


தற்போது, டிக்கெட் விற்பனை மூலம் 50,000 கோடி வருமானம் கிடைக்கிறது. இதனை, மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம் மூலம், 2019- 20 ம் ஆண்டில் 56,000 கோடியாக அதிகரிக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. மானியத்தை விட்டு கொடுக்கும்படி, விரிவாக பிரசாரம் செய்யப்படும். இந்த திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உருவாக்கியுள்ளார். எனினும் எதிர்ப்பு காரணமாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் இரயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.