ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11 வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

INX நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் உடனடியாக அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.


ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு தொடர்ந்து அனுமதி அளித்தது. மேலும், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 18 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 


அமலாக்கத்துறை விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் விசாரணை நடத்த உள்ளதால் நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.