ஸ்லீப் மோடுக்கு சென்ற ரோவர்... முடிந்ததா பிரக்யானின் வேலை - இஸ்ரோ சொல்வது என்ன?
Pragyan Rover Sleep Mode: நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Pragyan Rover Sleep Mode: சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் அதன் வெற்றிக்கரமான முதற்கட்ட பணிகளுக்கு பின் தற்போது பாதுகாப்பாக நிலவில் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டு, ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், APXS மற்றும் LIBS ஆகிய இரண்டு பேலோடுகளும் தற்சமயம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியது.
அடுத்த சூரிய உதய வரை காத்திருப்பு
தற்போது, நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 22ஆம் தேதி அன்று சந்திர மேற்பரப்பில் எதிர்பார்க்கப்படும் அடுத்த சூரிய உதயம் ஏற்படும்போது பிரக்யான் ரோவர் மீண்டும் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. செயலற்ற நிலையில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ரோவரின் பேட்டரி முழுவதுமாக சோலார் ஆற்றல் மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. மேலும் அதன் சோலார் பேனல் ஒளி உறிஞ்சுதலை மேம்படுத்தும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இஸ்ரோ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தூதர்
ரோவர் மீண்டும் செயல்படுவது குறித்து முழுமையான உறுதி அளிக்கப்படவில்லை என்றாலும், இஸ்ரோ அதன் வெற்றிகரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது, மற்றொரு தொடர் பணிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். இருப்பினும், ரோவர் மீண்டும் எழவில்லை என்றால், அது எப்போதும் சந்திர மேற்பரப்பில் இருக்கும், இந்தியாவின் நீடித்த நிலவின் தூதராக பணியாற்றும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஆதவனை ஆராய புறப்பட்ட ஆதித்யா L-1! 14.85 கோடி கிமீ தொலைவு... 15 லட்சம் கிமீ பயணம்!
லேண்டர் மற்றும் ரோவரின் சாதனைகள்
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று, சந்திரனின் தென் துருவத்திற்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்மூலம், இந்தியா முதல்முறையாக நிலவில் தடம் பதித்தது. நிலவில் தடம் பதிக்கும் நான்காவது நாடு என்ற பெருமை மட்டுமின்றி, நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற மாபெரும் சாதனையை செய்தது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆராய கீழே இறக்கப்பட்டது. அதன் பின் தொடர்ந்து, சந்திர நிலப்பரப்பை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தது. இந்த சாதனை, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஆளில்லா ரோபோவை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவைக் குறித்தது, இது சந்திர ஆய்வில் குறிப்பிடத்தக்க மைல்கல்.
லேண்டரிலிருந்து நிலைநிறுத்தப்பட்டதும், ரோவர் அதன் தோற்றப் புள்ளியில் இருந்து 100 மீட்டர்கள் வரை சென்று, நிலவின் நிலப்பரப்பின் மதிப்புமிக்க புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரப் பயணத்தைப் பற்றிய அப்டேட்களை இஸ்ரோ தொடர்ந்து வழங்கி வருகிறது, நிலவுக்கான இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தைப் பற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்துவதை உறுதி செய்கிறது.
ABXS & LIBS என்றால் என்ன?
ABXS மற்றும் LIBS ஆகிய இரண்டு பேலோடுகள் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த பேலோடுகளின் தரவுகள் லேண்டர் விக்ரம் வழியாக பூமிக்கு அனுப்பப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரன் போன்ற சிறிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகத்தின் மேற்பரப்பில் மண் மற்றும் பாறைகளின் அடிப்படை கலவையின் பகுப்பாய்விற்கு APXS கருவி மிகவும் பொருத்தமானது. APXS கருவி அலுமினியம், சிலிக்கான், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற முக்கிய எதிர்பார்க்கப்படும் தனிமங்களைத் தவிர, கந்தகம் உட்பட சுவாரஸ்யமான சிறிய கூறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளன. ரோவரில் உள்ள லேசர் தூண்டப்பட்ட பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி ஏற்கனவே கந்தகத்தின் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இஸ்ரோ மனிதர்களை நிலவிற்கு அனுப்புவது எப்போது... நிபுணர்கள் கூறுவது என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ