Supreme Court Verdict: ஓரினச்சேர்க்கை திருமண சட்ட அங்கீகாரம் வழக்கு `கடந்த வந்த பாதை`
Supreme Court Verdict On Same Sex Marriage: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓரினசேர்க்கை திருமண சட்ட வழக்கில் தன் பாலின திருமண ஜோடிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓரினசேர்க்கை திருமண சட்டம் என்றால் என்ன? அது கடந்த வந்த பாதையை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Marriage Equality Verdict In India: உச்ச நீதிமன்றத்தால் முன்பே ஓரினச்சேர்க்கை (Homosexuality) சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இன்று (அக்டோபர் 17, செவ்வாய்கிழமை) 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஓரினச்சேர்க்கை திருமணம் அல்லது தன் பாலின திருமணத்திற்கு "சட்ட அங்கீகாரம்" வழங்க மறுத்துவிட்டது. அதாவது நீதிமன்றத்தால் சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்று மேற்கோள்காட்டி உள்ளது. நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தின் சார அம்சங்களை விளக்கி அதை நடைமுறைப்படுத்த மட்டுமே முடியும் எனவும், அதேநேரத்தில் சிறப்புத் திருமணச் சட்டத்தின் விதிகளை மாற்ற வேண்டுமா? இல்லையா? என்பதைக் குறித்து முடிவு செய்வது நாடாளுமன்றத்தின் கடமை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் (Dhananjaya Yeshwant Chandrachud) கூறியுள்ளார். மேலும் தன் பாலின திருமண அங்கீகாரம் குறித்து மத்திய அரசு குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்கலாமா? என்ற வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of India) டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதி ஹிமா கோலியைத் தவிர, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி கவுல், நீதிபதி பட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் ஐபிசியின் 377வது பிரிவின் ஒரு பகுதியை 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் ரத்து செய்ததுஇங்கு குறிப்பிடத்தக்கது.
தன் பாலின திருமண சட்டம் அங்கீகாரம் வழக்கு கடந்த வந்த பாதை:
2022 நவம்பர் 25: சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இதுத்தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
2023 ஜனவரி 6: நாடு முழுவதும் தன் பாலின திருமண சட்ட அங்கீகாரம் குறித்து பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிக்கொள்ள நீதிபதிகள் (Supreme Court Judges) அனுமதி அளித்தனர். மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை 2023 மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க - தன்பாலின திருமண வழக்கு... தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியவை என்ன?
2023 மார்ச் 12: தன் பாலின திருமண சட்டம் அங்கீகாரம் வழக்கை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாலின திருமண சட்டம் அங்கீகாரம் என்பது "இந்திய சமுதாயத்திற்கு எதிரானது" எனக் கூறியிருந்தது.
2023 மார்ச் 13: தன் பாலின திருமண சட்டம் அங்கீகாரம் வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் பதில், ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் உள்ளிட்ட தொடர்புகளை மனதில் வைத்து, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
2023 ஏப்ரல் 15: தன் பாலின திருமண சட்டம் அங்கீகாரம் வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதாவது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
2023 ஏப்ரல் 18 (முதல் நாள் விசாரணை): தன் பாலின திருமண சட்டம் அங்கீகாரம் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. முதல் நாளில், உச்ச நீதிமன்றம் "தனிநபர் சட்ட பிரிவுக்குள் செல்லாமல், 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் மூலம் ஒரே பாலின ஜோடிகளுக்கு உரிமைகளை வழங்க முடியுமா என்பதை மட்டும் ஆராய்வோம்" என்று கூறியது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல், "இந்த மனுக்கள் மேல்தட்டு வர்க்க மக்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன" என்று கூறியிருந்தார்.
2023 ஏப்ரல் 19 (இரண்டாவது நாள் விசாரணை): இந்த வழக்கில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதேநேரத்தில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, "தத்தெடுப்பு, வாடகைத் தாய், மாநிலங்களுக்கு இடையேயான வாரிசுரிமை, வரி விலக்கு, கருணை அடிப்படையில் அரசு நியமனங்கள் போன்ற பலன்களைப் பெற திருமணம் அவசியம்" என்று கூறினார்.
2023 ஏப்ரல் 20 (மூன்றாம் நாள் விசாரணை): குழந்தையை தத்தெடுப்பது குறித்து நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது. அப்பொழுது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் விஸ்வநாதன், சாதாரண பெற்றோர்கள் போலவே LGBTQ தம்பதியர்களும் குழந்தைகளை வளர்க்கும் திறன் கொண்டவர்கள் என தனது வாதத்தை வைத்தார். சாதாரண பெற்றோர்கள் போலவே ஓரினச்சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்ள முடியாது என்ற வாதத்தை பெஞ்ச் ஏற்கவில்லை. ஓரினச்சேர்க்கை உறவு என்பது வெறும் உடல் உறவு மட்டுமல்ல, நிலையான உணர்ச்சிபூர்வமான உறவை விட அதிகமானது என்று தலைமை நீதிபதி கூறினார்.
2023 ஏப்ரல் 25 (நான்காவது நாள் விசாரணை): நான்காவது நாள் விசாரணையில் தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகளில் தலையிட நாடாளுமன்றத்துக்கு உரிமை உண்டு என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதுதான் கேள்வி.
சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் "தன் பாலின திருமண சட்டம் அங்கீகாரம் வழங்குவது" குறித்து பேசும், இதே நேரத்தில், "பல தனிநபர் சட்ட வாரியங்களிலும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கும்". எனவே ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட உரிமையை வழங்கலாமா வேண்டாமா என்பதை மட்டும் பரிசீலிப்பது நல்லது என்று நீதிபதி கவுல் மற்றும் நீதிபதி பட் கூறினார்கள். இந்த வழக்கில் மிக ஆழமாகச் சென்றால் விஷயம் சிக்கலாகி விடும் என நீதிகதிகள் கூறினார்கள்.
இதேநாளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மேனகா குருசாமி, அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை குறித்த காரணத்தை பார்லிமென்டில் பேச முடியாது. எந்தவொரு சமூகத்தினரின் உரிமைகள் மறக்கப்படும் போது, அரசியலமைப்பின் 32 வது பிரிவின் அடிப்படையில் அரசியலமைப்பு பெஞ்சை அணுக அவர்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார். மனுதாரர்கள் எந்த சிறப்பு சலுகையையும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அவர்களது உறவின் உறவை அங்கீகரிக்கும் உரிமையை கோருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2023 ஏப்ரல் 26 (ஐந்தாவது நாள் விசாரணை): அன்றைய விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் துஷார் மேத்தா வாதாடுகையில், ஒரே சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவு மக்களுக்காக வெவ்வேறு கருத்துக்களை நீதிமன்றம் எடுக்க முடியாது. அதேபோல் புதிய சட்டவரைவை கொண்டு வரும்படி கட்டாயப்படுத்த முடியாது என்றார்.
LGBTQIA+ இல் 'பிளஸ்' என்றால் என்ன என்பது விளக்கப்படவில்லை. இந்த பிளஸில் குறைந்தது 72 பிரிவுகள் உள்ளன. ஆணாகவோ? பெண்ணாகவோ? பாலினம் என்பது மனநிலை மாற்றங்களைப் பொறுத்தது என்று ஒரு வகை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பாலினம் என்னவென்று யாருக்கும் தெரியாது.
சில நாங்கள் எந்த பாலினத்தின் கீழும் வர மாட்டோம் எனக் கூறுபவர்களும் இருக்கிறார்கள் என்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களை சட்டம் எப்படி அடையாளம் காணும் எனக் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் எது செல்லுபடியாகும் திருமணம்? யாருக்கிடையே என்பதை யார் முடிவு செய்வார்கள்? என்பதே இங்கு உண்மையான கேள்வியாக உள்ளது என்று மேத்தா கூறினார். இந்த விவகாரம் முதலில் நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாநிலங்களவைக்கோ செல்லக் கூடாதா என்று மேத்தா வாதிட்டார்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை
ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும். ரேஷன் கார்டுகளில் ஓரினச்சேர்க்கை தம்பதிகளை குடும்பமாக சேர்ப்பது, கூட்டு வங்கி கணக்குகளுக்கு ஓரினச்சேர்க்கை ஜோடிகளை பரிந்துரைப்பது, ஓய்வூதியம், வேலை போன்றவற்றை இந்த குழு பரிசீலிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவத்துள்ளது.
இதனையடுத்து ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜாரான ஜெனரல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, பிரச்னைகளுக்கு தீர்வு காண குழுவை அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் படிக்க - தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ