பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த இரு வாரங்களில் 12 காங்கிரஸ், 3 மஜத MLA-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பெரும்பான்மையை இழந்த குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜக தரப்பில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று (ஜூலை 18) வாக்கெடுப்பு நடைபெற வில்லை. குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், கால தாமதம் செய்கிறது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பாஜக எம்.எல்.ஏ-க்கள். அமளிக் காரணமாக சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். சபாநாயகரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இரவு முழுவதும் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். 


மேலும் அன்று மாலை ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து, கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதன்பின்னர் ஜூலை 19 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வில்லை. 


இதனையடுத்து மீண்டும் பாஜகவினர் ஆளுநரிடம் முறையிட்டனர். அதன் பின்னர் ஆளுநர் தரப்பில் இருந்து, ஜூலை 19 ஆம் தேதி (வெள்ளிகிழமை) மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பட்டது. ஆனால் மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இரவு 8.45 மணிவரை அவை நடைபெற்ற நிலையில், திங்கட்கிழமை வரை அவையை ஒத்தி வைப்பதாகவும், திங்கட்கிழமை அன்றும் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்பார்கள் என்றும், அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மீண்டும் கர்நாடக சட்டப்பேரவை தொடங்கியது. இன்று குமாரசாமி ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் குமாரசாமி மேலும் இரண்டு நாள் அவகாசம் கோரியதால் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ அமளியில் ஈடுபட்டனர். 


இதனிடையே தங்களது பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி MLA-க்கள் 15 பேரும் நாளை காலை காலை 11 மணிக்கு முன்னதாக நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளார்.


பெம்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 முறை உத்தரவிட்ட நிலையிலும் குமாரசாமி நிரூபிக்கவில்லை. இந்தநிலையில், இன்று இரவு 7 மணிக்கு ஆளுநர் வஜூபாய் வாலாவை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.