14 மணிநேரம் வேலை... ஆலோசனையில் கர்நாடக அரசு...? - கோபத்தில் ஐடி ஊழியர்கள் - என்ன விஷயம்?
Karnataka News: சில ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை ஒரு நாளுக்கு 14 மணிநேரம் வேலை வாங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Karnataka IT Employees 14 Hours Worktime: கர்நாடக அமைச்சரவை கடந்த சில நாள்களுக்கு முன் தனியார் துறையில், கன்னட மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதன்பின் எழுந்த சலசலப்புகளால் அந்த தீர்மானத்தை தற்காலிமாக கிடப்பில் போட்டுள்ளது. இந்த மசோதா குறித்த பேச்சுகளே இப்போதுதான் அடங்கியிருக்கும் நிலையில், தற்போது மற்றொரு தகவலும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, கர்நாடகாவில் உள்ள சில ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை ஒரு நாளுக்கு 14 மணிநேரம் வேலை வாங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இதற்கு ஒப்புதல் அளித்தால் ஒரு ஐடி ஊழியர் 14 மணிநேரம் வேலைப் பார்ப்பது சட்டப்பூர்வமாகிவிடும்.
சட்டத்திருத்தம் வருமா...?
இந்த தகவல் வெளியானதில் இருந்து ஊழியர்கள் தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. அரசு இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஐடி நிறுவனங்களின் இந்த முடிவு மனிதநேயமற்றது எனவும் சாடி வருகின்றனர். மேலும் இதனால் ஊழியர்களின் உடல்நிலை என்பது கேள்விக்குள்ளாகும் என்றும் தெரிவிக்கின்றனர். ஐடி நிறுவனங்கள் இந்த முடிவை தொடர்ந்து பலரையும் திடீர் வேலை நீக்கம் செய்யவும் தயாராகும் என்றும் தங்களின் அச்சங்களை தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | மைக்ரோசாஃப்ட் பிரச்சினை... விமான நிலையங்களில் பாதிப்பு சீரடைந்தது
அதாவது, கர்நாடக மாநில அரசின் கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961இன் படி ஊழியர்களின் வேலைநேரம் என்பது 12 மணிநேரமாக உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவே ஐடி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, இந்த சட்டத்தில் உள்ள 12 மணிநேரம் மற்றும் கூடுதலாக 2 மணிநேரம் என 14 மணிநேரமாக அதிகபட்ச வேலைநேரத்தை நிர்ணயிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரிகிறது. கர்நாடக அரசும் இந்த சட்டத்திருத்தம் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐடி நிறுவனங்களின் கோரிக்கை
ஐடி துறை நிறுவனங்கள் அதன் கோரிக்கையில்,"ஐடி துறைகளில் பல பிரிவு ஊழியர்கள் ஒருநாளுக்கு 12 மணிநேரம் பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது, தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் 125 மணிநேரங்களை மிகாமல் இருக்கும்" என தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக முதல்கட்டமாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தற்போதைய தொழிலாளர் சட்டங்களின்படி ஒரு நாளுக்கு 9 மணிநேரம் என்பதே அனுமதிக்கப்பட்ட வேலைநேரமாகும். கூடுதல் நேரம் அனைத்தும் Overtime என்றே கணக்கிடப்படும்.
ஐடி ஊழியர்கள் சங்கம் கண்டனம்
இதுகுறித்து கர்நாடக ஐடி ஊழியர்களின் சங்கம் (KITU) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த சட்டத்திருத்தத்தை அரசு மேற்கொண்டால், ஐடி நிறுவனங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்று ஷிப்ட் அமைப்பை, இரண்டு ஷிப்ட் அமைப்பாக மாற்றிவிடுவார்கள். இதனால், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையிழப்பை சந்திப்பார்கள்" என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில்,"தற்போது ஐடி துறையில் உள்ள ஊழியர்களில் 45 சதவீதத்தினர் ஏற்கெனவே மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் என்றும் 55 சதவீத்தினர் உடல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் தற்போது இந்த சட்டதிருத்தம் அமல்படுத்தப்பட்டால் நிலைமை மோசமாகிவிடும்.
இந்த சட்டத்தை திருத்துவதன் மூலம் தொழிலாளியை ஒரு மனிதனாக கருதவே கர்நாடக அரசு தயாராக இல்லை என்றுதான் தோன்றும். மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை பெருக்கும் இயந்திரமாக மட்டுமே தொழிலாளர்களை அரசு கருதுகிறது" என்றும் சாடி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ