Karnataka Election Result 2023 Live: கர்நாடக தேர்தல் முடிவுகள்.. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை
Karnataka Election Result 2023 Live Updates:கர்நாடக தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது இன்று மதியத்துக்குள் தெரியவரும். காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
Karnataka Election Result 2023 Live Updates: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. காங்கிரஸ், பாஜக நேரடியாக போட்டிக் களத்தில் இருக்கின்றன. மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம்.
காங்கிரஸ் கட்சி இந்த முறை மீண்டும் அரியணையில் ஏற வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி, பிரிங்கா காந்தி, சிவக்குமார், சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் தொகுதிவாரியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்களுக்கு பலமாக இருக்கும் தொகுதிகளில் களம் கண்டது.
இந்நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமாக இப்போது வரை முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி காங்கிரஸ் கட்சி 125 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், நாளை ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளது. முன்னதாக மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் மற்றும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது.
Latest Updates
கர்நாடகாவின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து பாடுபடும் -அமித் ஷா
கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், "பல ஆண்டுகளாக பாஜகவுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த கர்நாடக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி தொடர்ந்து கர்நாடக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடும் எனப் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை!
கர்நாடக தேர்தல் முடிவு: கர்நாடகாவில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள் -பிரதமர் மோடி
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக நிர்வாகிகளின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம் என பிரதமர் மூடி ட்வீட்.
2024 முடிவின் ஆரம்பம்... இனி பாஜக தோல்வியடையும் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் எனது வணக்கங்கள்.! வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். குமாரசாமியும் சிறப்பாகச் செயல்பட்டார். சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச தேர்தல்கள் வரவுள்ளன, இரண்டு தேர்தல்களிலும் பாஜக தோல்வியடையும் என்று நான் நினைக்கிறேன். இது 2024 முடிவின் ஆரம்பம். இனி அவர்கள் (பாஜக) 100 இடங்களை கூட தாண்டமாட்டார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி
உத்தரபிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தை சென்றடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்.
காங்கிரஸ் 57 இடங்களில் வெற்றி.. பாஜக 39 இடங்களிலும் வெற்றி
கர்நாடக தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை, 57 இடங்களில் வெற்றி.. பாஜக 39 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.க.-வை தோற்கடிக்க வேண்டும் என்பதே உண்மையான நோக்கம்: சரத் பவார்
என்சிபி தலைவர் சரத் பவார்: "கர்நாடகாவில் என்சிபி வலுவான கட்சி அல்ல. ஒரு முயற்சியாக சில வேட்பாளர்களை நிறுத்தினோம். வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை, ஆனால் ஒரு மாநிலத்தில் நுழைய இந்த முடிவை எடுத்தோம். கர்நாடகாவில் பா.ஜ.க.-வை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் உண்மையான நோக்கம்.” என்று கூறியுள்ளார்.
வெற்றிச் சான்றிதழைப் பெற்றார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
கனகபுரா தொகுதியில் பாஜக தலைவரும் அமைச்சருமான ஆர்.அசோகாவை 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தேர்தல் அதிகாரியிடம் தனது வெற்றிச் சான்றிதழைப் பெற்றார்.
தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன் -பொம்மை
இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து காரணங்களையும் கண்டறிந்து, பார்லிமென்ட் தேர்தலுக்கு கட்சியை மீண்டும் பலப்படுத்துவோம். என என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் -கனிமொழி ட்வீட்
காங்கிரசுக்கு வாழ்த்துக்கள்!
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. இது நாளை நாடு முழுவதும் மாற்றத்திற்கான வாக்குறுதியும் கூட. இனி வரும் அரசுக்கும் கர்நாடக மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்.
இது நாட்டை ஒன்றிணைக்கும் அரசியலின் வெற்றி.
காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இது உங்கள் லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி. முன்னேற்றம் என்ற எண்ணத்திற்கு முன்னுரிமை அளித்து கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றி இது. இது நாட்டை ஒன்றிணைக்கும் அரசியலின் வெற்றி.
கடின உழைப்பாளிகள் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்பு அனைத்தும் பலனளித்தது. கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும்.
வாழ்க கர்நாடகா, வாழ்க காங்கிரஸ்.
இவ்வாறு பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசம், கர்நாடகாவை அடுத்து ராஜஸ்தானிலும் வெல்லுவோம்
எங்களுக்குள் வேறுபாடுகள் உள்ளன, அவை இருக்கக்கூடாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது (சச்சின் பைலட் மற்றும் முதல்வர் கெலாட் இடையே உள்ள வேறுபாடு) உறுதியாக தீர்க்கப்படும். இமாச்சலப் பிரதேசம், கர்நாடகாவில் ஒற்றுமையாகப் போராடினோம், ராஜஸ்தானிலும் அதையே செய்வோம் என ராஜஸ்தானின் காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு வெற்றி, தோல்வி புதிதல்ல -எடியூரப்பா
கர்நாடக தேர்தல் முடிவை அடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு வெற்றி, தோல்வி புதிதல்ல, பின்னடைவை சுயபரிசோதனை செய்யும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகும் காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கர்நாடகத்தில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கவும் பாஜக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் களைவதற்கும் காங்கிரஸ் கட்சி உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாஜகவின் வெறுப்பு அரசியலைப் புறந்தள்ளி நல்லிணக்க அரசியலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள கர்நாடக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
ராகுல் காந்தி அடைந்த துன்பங்களுக்கு கிடைத்த வெற்றி
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி அடைந்த துன்பங்களுக்கு கிடைத்த வெற்றிதான் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு என்று காங்கிரஸ் எம்பி இம்ரான் பிரதாப்காரி கூறியுள்ளார்.
"இது பிரதமருக்கு எதிரான கர்நாடக மக்களின் வெற்றி, மதத்தின் மீதான பாஜகவின் அரசியலுக்கு கிடைத்த வெற்றி. இது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கதைகளுக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வெற்றி. இது அனைத்து துன்பங்களுக்கும் கிடைத்த வெற்றி என்று இம்ரான் பிரதாப்காரி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: இதுவரை என்ன நடந்தது?
224 இடங்கள் கொண்ட கர்நாடக சட்டசபையில், மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். காங்கிரஸ் ஏற்கனவே 136 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
பதவி விலகிய முதல்வரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டார். "எங்களால் இலக்கை கடக்க முடியவில்லை. முடிவுகள் வெளியானதும், விரிவான ஆய்வு செய்வோம். இடைவெளிகளையும் குறைபாடுகளையும் கண்டறிந்து, கட்சியை சீரமைத்து, லோக்சபா தேர்தலுக்கு தயாராகுவோம்" என்றார். .
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்பதில்தான் இனி காங்கிரஸின் கவனம் இருக்கும். கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா இருவருமே முதல்வர் பதவிக்கு ஆசை படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் 137 முன்னிலை.. 36 இடங்களில் வெற்றி
கர்நாடகா தேர்தல் முடிவுகள் | தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, காங்கிரஸ் 137 இல் 101 இடங்களில் முன்னணியில் உள்ளது மற்றும் 36 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 45 இடங்களில் முன்னிலை, 17 இடங்களில் வெற்றி பெற்றது.
சிறப்பான வெற்றி.. காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலை நிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் வெறுப்பு விரட்டப்பட்டு அன்பு துளிர்விட்டுள்ளது; ராகுல் காந்தி
கர்நாடகாவில் அன்புக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த நாடு அன்பை விரும்புகிறது. அதனால் வெறுப்புக்கான கடை சாத்தப்பட்டு, அன்புக்கான கடை கர்நாடகாவில் திறக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவில் கொடுத்த வாக்குறுதிகளை அமைச்சரவை அமைத்தவுடன் நிச்சயமாக நிறைவேற்றுவோம். முதலாளிகள் ஒரு புறமும், ஏழை மக்கள் ஒரு புறமும் நின்று போட்டியிட்டத்தில் ஏழை மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இதற்காக உழைத்த அனைத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும், கர்நாடக மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல்காந்தி பேசினார்.
கர்நாடக ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்; ராகுல்காந்தி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய ராகுல் காந்தி, கர்நாடக ஏழை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என கூறியுள்ளார்.
முதலாளித்துவத்துக்கு தக்க பாடம்; ராகுல் காந்தி
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதலாளித்துவவாதிகளுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடத்தை அளித்துள்ளனர் என ராகுல் காந்தி கருத்து
ராகுல்காந்தி ரியாக்ஷன்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் ராகுல் காந்தி
136 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் இப்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது. பாஜக முன்னிலை வகிக்கும் தொகுதிகள் 60 ஆக குறைந்துள்ளது.
வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் போட்ட ட்வீட் வைரல்
பஜ்ரங் பலியை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜக கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் பிரச்சாரமாக மேற்கொண்ட நிலையில், இப்போது பாஜகவை பஜ்ரங் பலி அகற்றிவிட்டதாக டிவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.
ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி
பாஜகவில் இருந்து விலகி தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி - தார்வாட் மத்தி தொகுதியில் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் மகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் யார்? சித்தராமையா ஓபன் டாக்
கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கட்சி தலைமை முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜக தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் - எடியூரப்பா
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெற்றிருக்கும் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் என எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் அமோகம்: அதிகரிக்கும் முன்னிலை தொகுதிகளின் எண்ணிக்கை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அந்தக் கட்சி முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கர்நாடகா: பாஜக தொகுதிகளின் எண்ணிக்கை சரிவு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. 62 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி முன்னிலையில் இருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 40 தொகுதிகள் குறைந்திருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் கர்நாடக தேர்தல் - அமைச்சர் பொன்முடி
கர்நாடக தேர்தல் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - திருமாவளவன்
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அக்கட்சி கவனமாக இருக்க வேண்டும் என திருமாவளவன் எச்சரித்துள்ளார். வழக்கம்போல் குதிரைபேரம் உள்ளிட்டஜனநாயக விரோத செயல்களை பாஜகவினர் செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
பாஜக இல்லாத தென் இந்தியா - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் கூறுகையில், "முதலில் ஹிமாச்சல பிரதேசத்தை வென்றோம், பிறகு கர்நாடகாவை வென்றோம்.. "காங்கிரஸ் இல்லாத பாரதம் (Congress mukt-Bharat)" என்று பேசினார்கள். ஆனால் இப்போது தென்னிந்தியாவில் "பாஜக இல்லாத தென் இந்தியா"வாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
கர்நாடகா காங்கிரஸின் முதலமைச்சர் யார்? மல்லிகார்ஜூனா கார்கே பதில்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை மேலிட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்துள்ளார்.
பாஜக முக்த் தென் இந்தியா: சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாடல்
காங்கிரஸ் முக்த் பாரதம் என சொல்லி வந்த பாஜகவுக்கு தென்னிந்தியா இப்போது முக்த் கொடுத்துவிட்டதாக சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் விமர்சித்துள்ளார்
பாஜகவின் முடிவு காலம் தொடங்கிவிட்டது -அகிலேஷ் யாதவ் மகிழ்ச்சி
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது, பாஜகவின் எதிர்மறை அரசியல், வகுப்புவாத, ஊழல், பணக்காரர்களுக்கு ஆதரவு, பெண்களுக்கு எதிரான செயல், இளைஞர்களுக்கு எதிரான செயல், சமூகத்தை பிளவுபடுத்தும் பிரசாரம், தனிமனிதனை மையமாகக் கொண்ட அரசியலின் "முடிவு" தொடங்கிவிட்டது என்பதை கர்நாடகாவிலிருந்து வரும் செய்தி சொல்கிறது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 43 விழுக்காடாக கர்நாடகாவில் அதிகரித்துள்ளது. ஆனால், பாஜகவின் வாக்கு சதவீதம் 36 விழுக்காட்டுக்கும் கீழாக குறைந்துள்ளது.
ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வருவார் -சித்தராமையா நம்பிக்கை
கர்நாடகா தேர்தல் முடிவுகள்2023 | இந்த தேர்தல் முடிவு, லோக்சபா தேர்தலுக்கான படிக்கல். பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்பதைக் காண்பேன் என நம்பிக்கை இருக்கிறது. மேலும் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வருவார் என்றும் நம்புகிறேன்: காங்கிரஸ் தலைவர் சித்தராமையா
ஆப்ரேஷன் தாமரை கர்நாடகாவில் நடைபெற வாய்ப்பே இல்லை: திக்விஜய் சிங்
ஆப்ரேஷன் தாமரை கர்நாடகாவில் நடைபெற வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவில் ஜோதிராதித்ய சிந்தியாக்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மோடி அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்; சித்தராமையா
கர்நாடக மக்கள் பிரதமர் மோடியின் அரசியலையும், வாக்குறுதிகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மக்களின் வெற்றி காங்கிரஸின் வெற்றி: மல்லிகார்ஜூன கார்கே
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் வெற்றி என்பது மக்களின் வெற்றி. மக்கள் எங்களை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நெகிழ்ச்சி
கர்நாடகாவில் சிந்தியாக்கள் இல்லை. வலுவான காங்கிரஸ்காரர்கள் மட்டும் உள்ளனர்!
கர்நாடகா தேர்தல் முடிவுகள் | காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், அவர்கள் (பாஜக) கோடி ரூபாய் செலவழித்து 'ஆபரேஷன் தாமரை' நடத்தாலாம். எங்களுக்கு (காங்கிரஸ்) பெரும்பான்மை கிடைக்கும். கர்நாடகாவில் சிந்தியாக்கள் இல்லை. கர்நாடகாவில் வலுவான காங்கிரஸார் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
கர்நாடக தேர்தல் தோல்வி எதிரொலி: பாஜக இல்லாத தென் மாநிலங்கள்
தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்த நிலையில் இப்போது அந்த மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியை தழுவியிருக்கிறது.
கர்நாடகா காங்கிரஸ் வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ராகுல்காந்தி, சோனியா காந்தி, சித்தராமையா, மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி.கே. சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்க காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். அவர் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் 72 விழுக்காடு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
கர்நாடக வெற்றி கொல்கத்தாவில் கொண்டாட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், இதனை கொல்கத்தாவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
காங்கிரஸ் தொண்டர்களின் கொண்டாட்டத்தில் சிக்கிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில், ஹாவேரி பகுதியில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் கார் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது.
தோல்வியை ஏற்கிறோம்: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
கர்நாடக மக்கள் சட்டப்பேரவை தேர்தலில் அளித்திருக்கும் முடிவை ஏற்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கு காரணம்.. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை
“பாரத் ஜோடோ யாத்ரா நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது” என்று ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் பிரச்சாரத்தைப் பற்றி காங்கிரஸின் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்?
ஆட்சியமைக்கும் வரை சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க தமிழ்நாட்டை தேர்வு செய்த காங்கிரஸ். கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சி இருக்கும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் உறுப்பினர்களை தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. விமான நிலையம் அருகே தயார் நிலையில் வாகனங்கள், கிழக்குக் கடற்கரையோரம் விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. யார் முதலமைச்சர்? என்ற குழப்பத்தையும் தீர்க்க காங்கிரஸ் திட்டம்.
பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி; ஜெய்ராம் ரமேஷ்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். பிரதமரை மக்கள் நிராகரிக்க தொடங்கிவிட்டதாகவும் பேச்சு.
பிரதமர் உட்பட அனைவரும் கடினமாக உழைத்தோம் -கர்நாடக முதல்வர் பொம்மை
#WATCH | பிரதமர் மற்றும் பாஜக தொண்டர்கள் உட்பட அனைவரும் பல முயற்சிகள் செய்தும், எங்களால் இலக்கை அடையமுடியவில்லை. முழு தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாங்கள் விரிவான பகுப்பாய்வு செய்வோம். லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக வரும் என கர்நாடக முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.
நாளை உரிமை கோருகிறது காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெறும் சூழலில் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறது.
காங்கிரஸ் வெற்றி தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பு
காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக 69 தொகுதிகளிலும், மஜத 24 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்து
#WATCH | கர்நாடக தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதாவை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த கட்சித் தொண்டர்களுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் தோல்வி
கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டில், ஹிரேகேரு தொகுதியிலும் தோல்வி
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இனிப்புகளை வழங்கி கொண்டாடிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்
தேர்தல் ஆணையத்தின்படி, கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் பி.ஸ்ரீ ராமுலு தோல்வி
கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் பி.ஸ்ரீ ராமுலு பெல்லாரி ஊரகம் தொகுதியில் தோல்வி
நாளை காலை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டம்
கர்நாடகா தேர்தல் முடிவுகளில் அக்கட்சி பெரும்பான்மையை தாண்டி 118 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) கூட்டம் பெங்களூருவில் நாளை காலை நடைபெறவுள்ளது.
கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யும் எச்டி குமாரசாமி -முன்னிலை
கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடி(எஸ்) தலைவருமான எச்டி குமாரசாமி பெங்களூருவில் உள்ள கோயிலுக்குச் சென்றார். சன்னபட்னா சட்டசபை தொகுதியில் அவர் முன்னிலை வகித்து வருகிறார்.
12 மணி நிலவரம்: காங்கிரஸ் 119 தொகுதிகளில் முன்னிலை
12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 119 தொகுதிகளில் முன்னிலை. பாஜக 73 தொகுதிகளிலும், மஜத - 25 தொகுதிகளிலும் முன்னிலை.
சித்தராமையா வெற்றி: 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
'40% கமிஷன்' கோஷம் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது: சச்சின் பைலட், காங்கிரஸ்
"காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அமோக வெற்றி பெறுவோம். ஊழலுக்கு எதிர்கா நாங்கள் எழுப்பிய "40 சதவீத கமிஷன் அரசு" என்ற கோஷத்தை, பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். பா.ஜ.,வை தோற்கடிக்க, நாங்கள் எழுப்பிய முக்கிய பிரச்னைகளை மக்கள் ஏற்று காங்கிரசுக்கு பெரும்பான்மையை கொடுத்துள்ளனர் என சச்சின் பைலட் கூறியுள்ளார்.\
கோலார் தங்க வயலில் காங்கிரஸ் முன்னிலை
கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபகலா 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். வெற்றி முகம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு.
காங்கிரஸ் 120 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடிக்கும் -சித்தராமையா
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில் 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சி 120 இடங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும், இது ஆரம்ப கட்டம் தான். இன்னும் பல சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய வேண்டும். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தில் 120 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடிக்கும்" என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
சிக்கமங்களூருவில் காங்கிரஸ் முன்னிலை
சிக்கமங்களூருவில் இருக்கும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை
மல்லேஷ்வரம் தொகுதியில் பாஜக வெற்றி
மல்லேஷ்வரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சிஎன் அஸ்வந்த் நாராயண் வெற்றி
பாஜக வேட்பாளர் 2 தொகுதிகளிலும் தோல்வி
சாம்ராஜ் நகர் மற்றும் வருணா என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட சோமன்னா தோல்வியை தழுவினார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான KGF தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூப கலா முன்னிலை. பாஜக வேட்பாளர் அஷ்வினி சம்பங்கி பின்னடைவு.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் வெற்றி
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மஜதவுக்கு முதல் வெற்றி
ஹசன் தொகுதியில் போட்டியிட்ட மஜத வேட்பாளர் ஹெச்பி ஸ்வரூப் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
பாஜகவின் கோட்டையில் காங்கிரஸ்
பாஜகவின் கோட்டை என கருதப்பட்ட குடகு மற்றும் சாம்ராஜ் மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது.
டிகே சிவக்குமார் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
சித்தராமையா (காங்கிரஸ்) - 5288 வாக்குகள் முன்னிலை, டி.கே.சிவக்குமார் (காங்கிரஸ்) - 41746 வாக்குகள் முன்னிலை, பசவராஜ் பொம்மை (பாஜக) - 21519 வாக்குகள் முன்னிலை, எச்.டி.குமாரசாமி (மஜத) - 524 வாக்குகள் முன்னிலை.
கர்நாடகாவில் முதல் வெற்றியை பதிவு செய்த காங்கிரஸ்
சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரகுமூர்த்தி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
11,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவு
8வது சுற்றின் முடிவில், ஹீப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷட்டர் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு. இவர் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவரது தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவரான எடியூரப்பா முழு கவனத்தையும் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீட் எடு கொண்டாடு.... சென்னையில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் சென்னையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
120 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை
தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ தகவலின் படி காங்கிரஸ் கட்சி 120 இடங்களிலும், பாஜக 69 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மஜத 26, சுயேட்சை 5 இடங்களில் முன்னிலை
பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த வெற்றி
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்பது ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் தொண்டர்கள் கருத்து
கர்நாடகா தேர்தல்; 8 அமைச்சர்கள் பின்னடைவு
சோமண்ணா, பி.சி.நாகேஷ், ஹாலப்பா ஆச்சார், நாராயண கவுடா, முருகேஷ் நிராணி, கோவிந்த கார்ஜோள் மற்றும் ஸ்ரீராமலு, சுதாகர் ஆகிய 8 அமைச்சர்கள் இப்போதைய நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
குமாரசாமி கட்சி 30 தொகுதிகளில் முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைவராக இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் படிபடியாக உயர்ந்து 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
டெல்லியில் களைகட்டும் காங்கிரஸ் அலுவலகம்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை இருக்கும் நிலையில், டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: சித்தராமையா கொண்டாட்டம்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் சித்தராமையா தொண்டர்கள் முன்பு தோன்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தயார் நிலையில் 12 ஹெலிகாப்டர்கள்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூரு அழைத்து வர தயார் நிலையில் 12 ஹெலிகாப்டர்கள்
மதியத்துக்கு மேல் டிரெண்ட் மாறும் - விபி துரைசாமி
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மதியத்துக்கு மேல் டிரெண்ட் மாறும் என தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெறிச்சோடிய கமலாலயம்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை தியாகராய நகரில் இருக்கும் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சி.டி.ரவி பின்னடைவு
தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்மகளூரு தொகுதியில் தொடர் பின்னடைவு
காங்கிரஸில் கோஷ்டி பூசல்: பாஜகவுக்கு வாய்ப்பு
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கோஷ்டி பூசலால் அக்கட்சியால் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி கொடுக்க முடியாது என பாஜக தலைவர் நிதின் ஜெயின் தெரிவித்துள்ளார்
பாஜக அமைச்சர்கள் பின்னடைவு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் சோமன்னா 9000 வாக்குகள் பின்னடைவு. இன்னும் பல தொகுதிகளில் அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
பெங்களூரில் காங்கிரஸ் கொண்டாட்டம்
பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கு அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதால் பெங்களூருவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஹெலிக்காப்டரில் வேட்பாளர்களை அழைத்து வரும் காங்கிரஸ்
கடலோர கர்நாடகா என பெங்களூரு நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும் தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை மூலமாக உடனடியாக பெங்களூர் நகருக்கு அழைத்து வர காங்கிரஸ் கட்சி திட்டம்
சிம்லாவில் பிரியங்கா காந்தி கோவிலில் வழிபாடு
கர்நாடகா சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிம்லாவில் பிரியங்கா காந்தி கோவிலில் வழிபாடு. சிம்லாவில் உள்ள ஜக்கு ஹனுமான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்
கர்நாடக தேர்தல்: தேர்தல் ஆணைய முன்னிலை நிலவரம்
தேர்தல் ஆணைய தகலின்படி காங்கிரஸ் 95 தொகுதிகளிலும், பாஜக 61 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மஜத 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 2 இடங்களில் முன்னிலை
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அமோக முன்னிலை
கர்நாடக காங்கிரஸ் தலைவர் கனகபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் அசோக்கை விட அதிக வாக்குகள் பெற்று அமோக முன்னிலை பெற்றுள்ளார்
காங்கிரஸூக்கு தாவிய ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவு
அண்மையில் பாஜகவில் இருந்து காங்கிரஸூக்கு தாவிய ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி - தர்வாத் தொகுதியில் பின்னடைவு
காங்கிரஸ் அமோகமாக ஆட்சியமைக்கும்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் ஹேரா
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 113க்கும் அதிகமான இடங்களைப் பெற்று அமோகமாக கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் ஹேரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் முன்னிலை நிலவரம்
தேர்தல் ஆணைய தகலின்படி காங்கிரஸ் 74 தொகுதிகளிலும், பாஜக 45 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மஜத - 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
131 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் - 131
பாஜக - 73
மஜத - 18மற்றவை - 02
கட்சித்தாவலை தடுக்க காங்கிரஸ் நடவடிக்கை
ஆட்சி அமைக்க தேவையான பெருபான்மை இடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பெங்களூரு நகருக்கு வந்து விட வேண்டும்: காங்கிரஸ் மாநில தலைமை உத்தரவு
115 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை
கர்நாடக மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 115 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்
காங்கிரஸ் அமோகம்: முன்னிலை நிலவரம்
தேர்தல் ஆணையத்தின் நிலவரப்படி இப்போது வரை காங்கிரஸ் கட்சி 38 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மஜத 2 இடங்களில் முன்னிலை
பாஜகவின் இலக்கு சிறந்த நிர்வாகம்; சதானந்த் கவுடா
பாஜவின் இலக்கு என்பது சிறந்த ஆட்சி மற்றும் நிர்வாகத்தை கொடுப்பது என சதாநந்த கவுடா தெரிவித்துள்ளார்.
என் தந்தை முதல்வராக வேண்டும்: யதீந்திர சித்தராமையா
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்றுவதே எங்கள் இலக்கு. அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் யதீந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை முதலமைச்சராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி அமைக்கும்
முதல் கட்ட தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மிக குறைந்த அளவிலான வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் - 115
பாஜக - 72
மஜத - 15மற்றவை - 04
காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் - 108
பாஜக - 72
மஜத - 15மற்றவை - 04
20க்கும் அதிகமான இடங்களில் மஜக முன்னிலை
முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனாதனத்தின் தலைவருமான குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், மஜத 20க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
90 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை தொடங்கி அரை மணி நேரம் ஆகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. 90 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சி முன்னிலை. 60 இடங்களில் பாஜக முன்னிலை.
காங்கிரஸ் முன்னிலை
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவாகியுள்ள வாக்குகள் என்ன தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் பாஜகவை விட அதிக இடங்களை பெற துவங்கியுள்ளது
களைகட்டும் டெல்லி காங்கிரஸ் அலுவலகம்
பாஜகவை அகற்றுவதே இலக்கு
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்றுவதே எங்கள் இலக்கு. அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் பேட்டி
குமாரசாமி பின்னடைவு
முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனாதனத்தின் தலைவருமான குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
கர்நாடக தேர்தல் முன்னிலை நிலவரம்
224 தொகுதிகளில் தற்போது 169 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரிய வந்திருக்கிறது. இதில் பாஜக 82, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 10, பிற கட்சிகள் 1
குமாரசாமி முன்னிலை
முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனாதனத்தின் தலைவருமான குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் முன்னிலை
ஜெகதீஷ் ஷட்டர் முன்னிலை
அண்மையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைந்த ஜெகதீஷ் ஷட்டர் ஹூப்பள்ளி-தர்வாட் சென்ட்ரல் தொகுதியில் முன்னிலை
முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை
கர்நாடக முதலமைச்சர் சிக்கான் தொகுதியில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை
கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் முன்னிலை
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கனகபுரா தொகுதியில் முன்னிலை
பசவராஜ் பொம்மை வழிபாடு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் ஹூப்ளியில் இருக்கும் ஹனுமன் கோயிலில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வழிபாடு
தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை
தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் பாஜக - 22, காங்கிரஸ் - 16, மதசார்பற்ற ஜனதா தளம் - 7, பிற கட்சி 1
முன்னிலைதபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை
தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் பாஜக - 8, காங்கிரஸ் - 5, மதசார்பற்ற ஜனதா தளம் - 1, பிற கட்சி - 1
கர்நாடக தேர்தல் 2023: தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 36 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன
டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை: குமாரசாமி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, இப்போது வரை எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பெரும்பான்மை பெறும்; சித்தராமையா
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 120 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.
பசவராஜ் பொம்மை வீட்டு முன்பு பாதுகாப்பு
தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வீட்டு முன்பு பாதுகாப்பு பணிக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் மங்களூரு உள்ளிட்ட தொகுதிகளில் இருக்கும் பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 14 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில்
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி (சிக்கமகளூரு தொகுதி)
சிக்மகளூர் சட்டமன்ற தொகுதி பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் எச்.டி.தம்மையாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இதேதொகுதியில் ஜேடிஎஸ் தனது வேட்பாளராக பிஎம் திம்மா ஷெட்டியை நிறுத்தியுள்ளது.
சிக்மகளூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி வெற்றி பெற்றார். சி.டி.ரவி 70,863 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பி.எல்.சங்கர் 44,549 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.
மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா (தீர்த்தஹள்ளி தொகுதி)
கர்நாடகாவில் உள்ள தீர்த்தஹள்ளி தொகுதியில் அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கிம்மனே ரத்னாகரை களமிறக்கியுள்ளது.
தீர்த்தஹள்ளி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 ஆம் ஆண்டு தீர்த்தஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் அரக ஞானேந்திரா 67527 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா (ஷிகாரிபுரா தொகுதி)
கர்நாடகாவில் முதல்முறையாக பாஜக வெற்றி பெற்ற மூத்த தலைவர் பிஎஸ் எடியூரப்பாவின் கோட்டை என்பதால் அனைவரது பார்வையும் ஷிகாரிபுரியா தொகுதியில் உள்ளது. இருப்பினும், எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து, இம்முறை ஷிகாரிபுரியா தொகுதியில் பாஜக சார்பில் தனது மகன் பி.ஒய். விஜயேந்திரர் களமிறக்கப்பட்டு உள்ளார். விஜயேந்திராவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் மல்தேஷ் களத்தில் உள்ளார்.
ஷிகாரிபூரியா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018
2018 தேர்தலில், பிஎஸ் எடியூரப்பா ஷிகாரிபுரியா சட்டமன்றத் தொகுதியில் 35397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எடியூரப்பா 1983 முதல் 8 முறை இந்த தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே (சித்தாப்பூர் தொகுதி)
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சித்தப்பூர் (எஸ்சி) தொகுதியில் போட்டியிடுகிறார். கார்கேவின் மகன் என்பதால், சித்தப்பூர் தொகுதியின் முடிவை அனைவரும் உற்று நோக்குவார்கள். இந்த தொகுதியில் பாஜக சார்பில் மணிகண்ட ரத்தோர் போட்டியிடுகிறார்
சித்தப்பூர் எஸ்சி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 இல், பிரியங்க் கார்கே சித்தப்பூர் எஸ்சி தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸின் பிரியங்க் 69700 வாக்குகள் பெற்றார்.
ஜெகதீஷ் ஷெட்டர் (ஹூப்பள்ளி-தர்வாட் சென்ட்ரல் தொகுதி)
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெகதீஷ் ஷெட்டர் பாஜக மூத்த தலைவராக இருந்துள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே சீட்டு தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அவர் பாஜகவில் இருந்து விலகினார். இந்தமுறை காங்கிரஸில் சார்பில் போட்டியிடும் அவர் பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கிணகையை எதிர்கொள்கிறார்.
ஹூப்ளி-தர்வாட் சென்ட்ரல் தொகுதி தேர்தல் முடிவுகள் 2018
2018 கர்நாடக சட்டசபை தேர்தலில், பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளி-தர்பாத் சென்ட்ரல் தொகுதியில் 75,794 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பொழுது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டாக்டர் மகேஷ் நல்வாட் 54,488 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆனால், இந்த முறை ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவுக்கு சவாலாக உள்ளார்.
ஜேடிஎஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி (சன்னபட்னா தொகுதி)
கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எஸ்.டி.குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் போட்டியிடுகிறார். 2004 முதல் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை "கிங்மேக்கர்" என்று கூறிக்கொண்டார். இங்கு குமாரசாமி எதிர்த்து பாஜகவின் சிபி யோகேஸ்வரை போட்டியிடுகிறார். சிபி யோகேஷ்வர் 1999 முதல் பல்வேறு கட்சிகளில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
சன்னபட்னா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018
2018 தேர்தலில் சன்னபட்னா தொகுதியில் குமாரசாமி வெற்றி பெற்றார். அவர் 21,530 வாக்குகள் வித்தியாசத்தில் சிபி யோகேஷ்வரை தோற்கடித்தார்.
கர்நாடகா காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் (கனகபுரா தொகுதி)
கர்நாடகா காங்கிரஸின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரால் கனகபுரா தொகுதி பிரபலமானது. சிவகுமார் 7 முறை இத்தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்துள்ளது. அவருக்கு எதிராக பாஜகவின் ஆர். அசோக் தேர்தல் களத்தில் உள்ளார்.
கனகபுரா சட்டமன்ற முடிவுகள் 2018
2018 தேர்தலில் கனகபுரா தொகுதியில் இந்திய காங்கிரஸ் கட்சியின் டிகே சிவகுமார் 127552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேசமயம் அவருடன் போட்டியிட்ட ஜேடிஎஸ்கே நாராயண கவுடா 47643 வாக்குகள் மட்டும் பெற்றார்
முன்னாள் முதல்வர் சித்தராமையா (வருணா தொகுதி)
மைசூர் மாவட்டத்தில் உள்ள வருணா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த முறை இங்கிருந்து தனது மகன் யதீந்திரனை களமிறக்கினார். ஆனால் இந்த முறை அவரே களத்தில் இருக்கிறார். இம்முறை சித்தராமையாவை எதிர்கொள்ள பாஜக அமைச்சர் சோமன்னாவை களமிறக்கியுள்ளது.
வருணா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018
2018 இல், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் யதீந்திர சித்தராமையா 96435 வாக்குகள் பெற்று வருணா தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜகவின் தோட்டப்பா பசவராஜ் 37819 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை (சிக்கான் தொகுதி)
கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சிக்கான் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதான் போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவு சதவீதம்
கர்நாடகா முழுவதும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்?
224 சட்டப்பேரவைகளுக்கான கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறன்றன. வாக்கு எண்ணிக்கையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிகே சிவக்குமார் நம்பிக்கை
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பேசும்போது, எங்களுக்கான பணியை சிறப்பாக செய்திருக்கிறோம். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
பாஜக ஆட்சி அமையும்
தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் பாஜகவின் கர்நாடக மாநில மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக நிச்சயம் இருக்கும் என்றும், ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பு
காங்கிரஸ் கட்சி நிச்சயம் 146 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என தெரிவித்திருக்கிறது.
பாஜக பிளான்
பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், நிச்சயம் ஆட்சியமைப்போம் என்று அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் அசோகா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும்பான்மை யாருக்கு?
இதுவரை வெளியாகியிருக்கும் கருத்து கணிப்பு முடிவுகளில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகின்றன.
கர்நாடக தேர்தல்: மும்முனை போட்டி
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது