மம்தா பானர்ஜி இல்லாமல், `இந்தியா கூட்டணி`யை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது: காங்கிரஸ்
2024 Lok Sabha Polls, INDIA Alliance: மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணியின் `முக்கிய தூண்`. மம்தா ஜி இல்லாமல் இந்திய கூட்டணியை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
Mamata Banerjee Vs Congress: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இல்லாமல் எதிர்க்கட்சிகளின் அணியான "இந்தியா கூட்டணியை" யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவரான மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும், திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட இருப்பதாகத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தை அடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டணியின் "முக்கிய தூண்" திரிணாமுல் காங்கிரஸ் -ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் கட்சியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் உள்ள வடக்கு சல்மாராவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணியின் "முக்கிய தூண்" என்று கூறினார்.
மம்தா ஜி இல்லாமல் இந்திய கூட்டணியை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், மேலும் எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றாக பங்கேற்பார்கள்" என்று அவர் கூறினார்.
மம்தாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது -ராகுல் காந்தி
செவ்வாயன்று (ஜனவரி 23), அசாம் மாநிலத்தில் இந்திய நீதி பயணத்தில் இருந்தபோது, திரிணாமுல் கட்சியுடன் (சீட் பங்கீடு குறித்து) பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மம்தாவுடன் நல்ல உறவு இருப்பதாகவும் ராகுல் கூறியிருந்தார். நேற்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "மம்தா மற்றும் அவரது கட்சியுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சில நேரங்களில் நம் தலைவர்கள் ஏதாவது சொல்கிறார்கள், சில சமயங்களில் அவர்களின் தலைவர்கள் ஏதாவது சொல்கிறார்கள். ஆனால் இது கூட்டணியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.
காங்கிரஸ் முழுக்க முழுக்க பொய் சொல்கிறது -மம்தா பானர்ஜி
ஆனால் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, "என்னுடன் யாரும் எதுவும் பேசவில்லை. இது முழுக்க முழுக்க பொய். எய் ஜே அமடர் ராஜ்யே ஆச்சே அமகே ஏக் பார் ஓ போலேனி (அவர் எங்கள் மாநிலத்திற்கு வருவார் என்பது குறித்து எனக்குத் தெரிவிக்கப்படவில்லை) எனக் கூறினார்.
வங்காளத்தில் காங்கிரசுக்கு எந்தப் பங்கும் இல்லை-மம்தா பானர்ஜி
நாடு முழுவதும் 300 தொகுதிகளில் போட்டியிடுங்கள் மீதியை பிராந்தியக் கட்சிகளுக்கு விட்டுவிடலாம் என்று நான் அவர்களிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. வங்காளத்தில் காங்கிரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. தேர்தல் முடிந்ததும் என்ன செய்வது என்று முடிவு செய்வோம் என்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
வங்காளத்தில் பாஜகவை மட்டும் தோற்கடிப்போம் - மம்தா
வங்காளத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று எப்போதும் கூறி வந்தேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி. வங்காளத்தில் பாஜகவை மட்டும் தோற்கடிப்போம் என்று முதல் அமைச்சர் மம்தா கூறினார்.
காங்கிரஸ் Vs திரிணாமுல் காங்கிரஸ் இடையே சலசலப்பு
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்தால், மேற்கு வங்காளத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் கூட்டணியில் முள் குத்தியது போல் தெரிகிறது. திரிணாமுல் தலைவரை கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ள முயற்சி எடுபடுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம். மறுபுறம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்போம், ஆனால் மேற்கு வங்காளத்தில் தனியாக தேர்தலை சந்திபோம் என்ற நிலைப்பாட்டை திரிணாமுல் காங்கிரஸ் எடுக்குமா அல்லது இடதுசாரிகளுடன் கூட்டணி சேருமா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
நாளை மேற்கு வங்கம் செக்கிறார் ராகுல் காந்தி
நாளை (ஜனவரி 25, வியாழன்) பாரத் ஜோடோ நியாய ஒரு பகுதியாக கூச் பெஹாரில் உள்ள பாக்சிர்ஹாட் வழியாக மேற்கு வங்காளத்திற்குள் நுழைகிறார் ராகுல் காந்தி. அதன்பிறகு ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை அன்று வடக்கு வங்காள மாவட்டங்களைக் கடந்து, பின்னர் பீகார் செல்கிறார்.
மேலும் படிக்க - INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ