பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இணை அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் ஜோரா பஜார் என்ற இடத்தில் தசரா விழா கொடாட்டம் நேற்று கொண்டாடப்பட்டது. அங்குள்ள தண்டவாளத்தின் அருகே உள்ள மைதானத்தில் ராவணன் உருவ பொம்மையை எரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டினர். தண்டவாளங்களின் மறு பக்கத்தில் ராவணன் பொம்மை எரிக்கப்பட்டது. இதனை காண தண்டவாளத்தின் இரு பக்கத்திலும் உள்ள காலி இடத்தில் ஏராளமானவர்கள் கூடி இருந்தனர்.


அப்போது அந்த வழியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் வழியாக ஜலந்தர் செல்லும் ரயில் சென்றது. ராவணன் உருவ பொம்மை எரிந்த போது பட்டாசுகள் வெடித்த ஒலியால் ரயிலின் சத்தம் கேட்கவில்லை. இதனால் தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி தள்ளி விட்டு சென்றது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இந்த விபத்து தொடர்பாக ரயிலை இயக்கிய ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என விபத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் ரயில்வே தரப்பில் எந்த தவறும் நிகழவில்லை, பொதுமக்கள் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் விபத்தினை தவிர்த்து இருக்கலாம் என தெரிவித்த இணை அமைச்சர் மனோஜ் சின்கா விபத்து ஏற்படுத்திய ரயிலின் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, இந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார். காயம் அடைந்தவர்களுக்கு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.