அசாம்: அனைத்தையும் சாம்பலாக்கும் தீயின் கோபம், பிழம்புகளாக வெளிப்பட்டு, வானை நோக்கி உயர்ந்தன. தீயின் இந்த கோரத் தாண்டவத்தை பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் பார்க்க முடிகிறது. அசாமின் டின்சுகியா மாவட்டத்தின் பாகாஜன் (Baghjan) பகுதியில் அமைந்துள்ள ஆயில் இந்தியா லிமிடெட்டின் (Assam's Oil India Ltd ) எண்ணெய் கிணற்றில் செவ்வாய்க்கிழமை பலத்த ஓசையுடன் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் மளமளவென தீ பற்றிக்கொண்டது. தனது கோரப்பிடியின் வரம்பை அதிகரித்துக் கொண்டே செல்லும் தீயின் தாக்கத்தால், சுற்றுவட்டார கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஆறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும், 12-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுவட்டாரப் பகுதியில் குடியிருந்த 1600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பல நாட்களாக இந்த கிணற்றில் இருந்து எரிவாயு கசிந்துக் (Assam Gas Leak) கொண்டிருந்தது. திப்ரு-சாயிகோவா தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த எண்ணெய் கிணறு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பலத்த சபத்துடன் வெடித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதையடுத்து எரிவாயுக் கிணற்றில் ஏற்பட்ட தீயினால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை, மேகமாக சூழ்ந்து நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.


Also Read | தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த DMK MLA ஜெ.அன்பழகன் காலமானார்


இந்த தீ விபத்துக்குப் பிறகு இங்குள்ள கிராமவாசிகளிடம் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இனிமேல் இந்த மக்கள் எப்படி வாழ்வார்கள்? அவர்களின் வீடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டது. எண்ணெய் நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.


டால்பின்கள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகளுக்கும் இந்த பகுதி மிகவும் விருப்பமான இடமாகும். இந்த தீ விபத்தினால், பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் நெல் வயல்கள், நீர்நிலைகள் என அனைத்தும் மாசுபட்டுள்ளன. நேரம் செல்ல செல்ல ஆபத்தும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் பக்ஜன் யுபிஎஸ் மையம் உள்ளது. இங்கு இந்த ஒரு கிணறு மட்டுல்ல, இதுபோன்ற 23 கிணறுகள் உள்ளன. இவற்றில் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிக்கப்படுகிறது. பிற கிணறுகளுக்கும் தீ பரவினால் நிலைமை என்னவாகும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. 


Also Read | மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!


இந்த பகுதி பறவைகள் வாழும் இடம் என்று உலகப் புகழ் பெற்றது. உலகில் பல அரியவகை இனங்கள் இங்கு வசிக்கின்றன. இங்கிருந்து சற்றுத் தொலைவில் மாகுடி பில் என்ற ஏரி இருக்கிறது. அங்கு டால்பின்கள் உட்பட பல நீர்வாழ் விலங்குகள் வாழ்கின்றன. அவை அனைத்திற்கும் இந்த தீ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மாகுடி பில் ஏரி வரை தீ பரவி விட்டால் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.


தீயை அணைக்கும் முயற்சியில், ஆயில் இந்தியா (Oil and Natural Gas Corporation), ஓ.என்.ஜி.சி ஆகியவற்றின் தீயணைப்பு வாகனங்களுடன், டின்சுகியா மற்றும் திப்ருகார் மாவட்டத்தில் இருந்து பல தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டுள்ளன. என்.டி.ஆர்.எஃப்-இன் பல குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.


தற்போது, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. விமானப்படை தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், தீ தனது கோர நாக்குகளை அணைத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சியின் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


Also Read | கொரோனாவை எதிர்கொண்ட தைவானின் தொலைநோக்கு கண்ணோட்டத்தின் வெற்றி


இந்த சம்பவம் குறித்து மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடமும் பேசியுள்ளார். தீயை விரைந்து கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தீயை அணைக்க சிங்கப்பூரைச் சேர்ந்த ALERT DISASTER CONTROL நிறுவனத்தின் மூன்று நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். தீ விபத்து நடந்த நேரத்தில், கிணற்றிலிருந்து எரிவாயு கசிவைத் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தீ மிகவும் கடுமையாக இருப்பதாக கூறும் நிபுணர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவர ஒரு மாதம் ஆகலாம் என்று கூறுகின்றனர்.


(மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்)