பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி இன்று சந்தித்து பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கு சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் எம்.பி. இடைத் தேர்தலில் அதிக அளவு வன்முறை சம்பவம் நடந்தது. குறைந்த அளவு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பி.டி.பி வெற்றி வாய்ப்பை இழந்தது. மேலும் காஷ்மீரில் புதிய கலவரங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. கல்எறியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 


ராணுவ வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் தொடர்ந்து கல்வீசி வருகிறார்கள். அப்பாவிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி இந்த கல்வீச்சு சம்பவம் நடக்கிறது.


இந்த நிலையில் காஷ்மீர் முதல்-மந்திரியும், பி.டி.பி. கட்சி தலைவருமான மெகபூபா இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். 


மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமரிடம் ஆலோசித்தார். காஷ்மீருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் சூழலுக்கு பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என பிரதமரிடம் மெகபூபா முப்தி வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. 


பின்னர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்து காஷ்மீரில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.


இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மெகபூபா முப்தி, அடுத்த இரண்டு,மூன்று மாதங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  காஷ்மீரில் நிலவும் சூழலை மேம்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இது தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன்” என்றார்.