RBI நிதியை குறித்து ராகுல்காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்த நிர்மலா சீதாராமன்
ராகுல் காந்தி திருடன் - திருடன் என்று சொல்லும்போதெல்லாம், அவர் குழந்தையை போல விளையாடுவதாக நான் நினைக்கிறேன் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி: 1.76 லட்சம் கோடி நிதியை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது இந்த பிரச்சினையில் அரசியல் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), "எதிர்க்கட்சியின் அறிக்கை குறித்து நான் சிரிக்கிறேன்" என்று தெரிவித்தார். இந்த முடிவை பிமல் ஜலான் கமிட்டி (Bimal Jalan) எடுத்துள்ளது. அவர் இந்த துறையில் நிபுணர்கள். அத்தகைய சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியைப் பற்றி கேள்விகளை எழுப்புவது வினோதமாக நான் கருதுகிறேன் எனக் கூறினார்.
கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 414 கோடி ஆகும். திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரித் தொகை 52 ஆயிரத்து 637 கோடி ரூபாய் ஆகும். இதன் அடிப்படையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரித் தொகையை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியது, “பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அவர்கள் உருவாக்கிய பொருளதார பேரழிவை எப்படி சரிசெய்வது என்பது தெரியவில்லை. ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது. இது மருந்தகத்தில் பிளாஸ்டர் திருடி குண்டு காயத்திற்கு ஒட்டுவது போன்றதாகும்” என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி திருடன் - திருடன் என்று சொல்லும்போதெல்லாம், அவர் குழந்தையை போல விளையாடுவதாக நான் நினைக்கிறேன். அவரது அறிக்கைக்கு பொதுமக்கள் சரியான பதிலை அளித்துள்ளனர் எனக் கூறினார்.
மேலும் நாட்டின் பெரிய மற்றும் சிறு தொழிலதிபர்களை அச்சமின்றி வியாபாரம் செய்யுமாறு நிதி அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொழிலதிபர்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. நாட்டில் தொழிலதிபர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க நிதியமைச்சகம் தன்னால் முடிந்தவரை முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்மையில், வரி செலுத்துவோரை முறையாக நடத்துமாறு வருமான வரித்துறை அதிகாரிகளிடமும் முறையீடு செய்யப்பட்டது. வரித்துறை வழங்கிய அறிவிப்பு விதிகளும் மாற்றப்பட்டுள்ளன எனக்கூறினார்.